பாசன ஆறு, வடிகால் வாய்க்கால்களில் தீவிர தூர்வாரும் பணியால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

மன்னார்குடி:  திருவாரூர் மாவட்டத்தில் பாசன ஆறு, வடிகால் வாய்க்கால்களில் தீவிரமாக நடைபெற்று வரும் தூர்வாரும் பணியால் விவசாயிகள், கரையோரம் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி விவசாயம் என்பது மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்தும், பருவ மழையினை நம்பியும், விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளை தொடங்குவர்.

குறிப்பாக, குறுவை சாகுபடி என்பது மேட்டூர் அணையின் நீர் மட்டத்தை பொறுத்து விவசாயிகள் மேற்கொள்வர். அந்த வகையில் மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டாலும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேராத நிலையால் விவசாயிகள் மிகுந்த மனஉளைச்சலுக்கும், பொருளாதார இழப்புக்கும் உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பு குறுவை சாகுபடி பணியினை திட்டமிட்டு தொடங்க ஏதுவாக தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசன ஆறு, வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரும் பணிக்காக ரூ.71.50 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.

மேலும், மேட்டூர்அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒருசில நாட்களுக்குள் கடைமடை பகுதி வரை சென்று சேர ஏதுவாக ஏப்ரல் மாதத்தில் தூர்வாரும் பணியினை தொடங்கி மே மாதம் இறுதிக்குள் நிறைவு செய்திடவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் பாசன ஆறு, வாய்க் கால்கள், வடிகால்கள் என 115 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1200.56 கி.மீ ட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிக்காக ரூ.12.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மாவட்டம் முழுவதும் பொக்லைன் இயந்திரம் மூலம் பாசன ஆறு, வாய்க்கால்கள், வடிகால்கள் மேடு பள்ளம் இன்றி சமன்செய்யப்பட்டும், கரைகள் பலப்படுத்தப் பட்டும் போர்க்கால அடிப் படையில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன. 100 சதவீத பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடித்திட பொதுப்பணித்துறை நிர்வாகம் துரித நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படக்கூடும் என்ற நிலையில் நடைபெற்றுவரும் இத்தகைய தூர்வாரும் பணியால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு, இவ்வாண்டு குறுவை சாகுபடி பணியினை தொடங் கும் வகையில் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய தொடங்கியுள்ளனர்.

தூர்வாரும் பணியால் விவசாயிகள் மட்டுமின்றி குறிப்பாக ஆறு, வாய்க்கால்கள் கரையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய, நடுத்தர மக்கள் தூர்வாரும் பணியால் கரைகள் பலப்படுத்தப்படுவதால் கரை உடையும் அபாயம் நீங்கி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: