வடிகால் வாய்க்காலில் சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற மாற்று வழி காணப்படுமா?

*பொதுமக்கள் கோரிக்கை

நன்னிலம் : நன்னிலம் பகுதியில் வடிகால் வாய்க்காலில் விடப்படும் சாக்கடை கழிவுநீரை மாற்று வழியில் வெளியேற்றுவதற்கு வழிவகை காண வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் உள்ள, பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள், தூர்வாரி வரும் குறுவை சாகுபடிக்கு தயாராகும் நிலையில் சில வடிகால் வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், சாக்கடை நீர் ஓடும் வாய்க்காலாக மாறியுள்ள அவல நிலையும் காணப்படுகிறது. சாக்கடை நீராக மாறி உள்ள வாய்க்கால்கள், கொசு உற்பத்திக்கு மூல ஆதாரமாக உள்ளன. வாய்க்கால்களில், குடியிருப்பு சாக்கடை நீர் கொண்டு வந்துவிட்ட காரணத்தினால், விவசாய பயன்பாட்டிற்கு பயன்பட்டு வந்த வாய்க்கால்கள் தற்போது சாக்கடை நீர் வாய்க்கால்கள் ஆக காணப்படுகிறது.

அதிலும், காவாலி வாய்க்கால், அய்யனார் கோயில் வாய்க்கால், முழுமையாக சாக்கடை நீர் வாய்க்கால் ஆகவே மாறியுள்ளன. வாய்க்கால்களில் குடியிருப்புகளின் சாக்கடை நீர் கொண்டு வந்து விடப்படுகிறது. பெருமழை காலங்களில் மழைநீரால் சாக்கடை கசடுகள் அடித்துச் செல்லப்பட்டு, வாய்க்கால் தூய்மையானலும், அடுத்து சாக்கடை நீர் வருவதனால், இந்த வாய்க்கால்கள் நிரந்தர சாக்கடை வாய்க்கால் ஆகவே காணப்படுகிறது.

இதனால் வயலில் உள்ள நீரினை வடிகால் வாய்க்கால் மூலம், வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. பாசன வாய்க்கால்கள் சாக்கடை நீராக மாறியதால் விவசாயிகளும் இவ் வாய்க்கால்களை, சுத்தம் செய்வதற்கு சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களில் விடப்படும் சாக்கடை நீரை மாற்று வழியில் வெளியேற்றுவதற்கு வழிவகை காணப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Stories: