தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நபர் கைது

தென்காசி: தமிழக முதலமைச்சர் வீட்டில் உள்ள தனிப்பிரிவு காவல்கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர். தமிழக முதலமைச்சர் வீட்டில் உள்ள தனிப்பிரிவு காவல்கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவில் தொடர்பு கொண்ட மர்மநபர் சொத்து தகராறில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதலமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியதில் அது புரளி என்பது தெரியவந்தது. இதனையடுத்து வெடிகுண்டு விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை காவல்துறை விசாரணை நடத்தினர். அதில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்ற பகுதியிலிருந்து அந்தோணி ராஜ் என்பதும், இவர் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் டிராக் மேனாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவரது தந்தை ஜெபஜான் 2 மாதங்களுக்கு முன்பு இடப்பிரசனை தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் அந்த மனு மீது உரிய விசாரணை மேற்கொள்ளாததால், விரக்தியடைந்த அந்தோணிராஜ், தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு நேற்று இரவு குடிபோதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஆழ்வார்குறிச்சி போலீசார் அந்தோணிராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டநிலையில், தற்போது அந்தோணிராஜை சென்னை அழைத்து வர உள்ளனர். சில நாட்களுக்கு முன்னதாக சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நெல்லை சுத்தமல்லியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: