ஆந்திராவில் கோடை மழையால் விவசாய நிலங்களில் மக்கள் வைர வேட்டை-பல ஆண்டுகால விநோத நம்பிக்கை

திருமலை : ஆந்திர மாநிலம் கர்னூல், அனந்தபூர் உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லையில் உள்ள சில கிராமங்களில் மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் தேங்கும் தண்ணீரில் இருந்து வைரக்கல் கிடைப்பதாக பல ஆண்டுகளாக மக்கள் நம்பி வருகின்றனர். மேலும் சிலர் வைரக்கற்களை அதிக விலைக்கு விற்று பணக்காரர்களாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் மக்கள் வைரக்கற்களை தேடுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் சிலர் கண்ணாடி போன்ற கற்களை விவசாய நிலங்களில் இருந்து சேகரித்துள்ளார்களாம். ஆனால் அவைகள் வைர கற்களா? சாதாரண கற்களா? என்பது தெரியவில்லை.

இந்நிலையில் இந்தாண்டு ஆந்திராவில் பெய்த கோடை மழையால் பல இடங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, பகிடிராய் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வைர வேட்டையை தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வைர வேட்டையில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் கூறுகையில், ‘விவசாயி ஒருவருக்கு கிடைத்த வைரக்கல்லை ஜொனகிரியை சேர்ந்த வைர வியாபாரி ₹2 லட்சத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வைர வேட்டை நடக்கிறது. இந்தாண்டு முன்னதாகவே கோடை மழை பெய்ததால்  விவசாய வயல்களில்  வைரத்தை தேடுவதற்காக எங்கள் பகுதிக்கு பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வருகின்றனர். கடந்த ஆண்டு கிடைத்த வைரக்கல்லை பெற்றுக்கொண்டு தங்க நகைகளாக வியாபாரிகள் வழங்கியதாக கூறுகின்றனர். அதேபோன்று இந்த ஆண்டும் வைரக்கற்கள் கிடைத்தால் சொந்த வீடு கட்டும் கனவுடன் தற்போது தேடி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: