பள்ளிகள் விடுமுறையால் ஏலகிரி மலையில் குவியும் சுற்றுலா பயணிகள்

*கார் பார்க்கிங் இல்லாமல் போக்குவரத்து பாதிப்பு

*அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் பள்ளிகள் விடுமுறையால்  சுற்றுலா பயணிகள் குவிவதால் வாகனங்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 1800 மீட்டர் உயரம் கொண்ட ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு எந்த காலத்திலும் ஒரேமாதிரியான சீதோசன நிலை இருந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்க செய்கிறது.

14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைச்சாலையானது ஒவ்வொரு வளைவுக்கும் தமிழ் புலவர்கள், கொடை வள்ளல்கள் பெயரை சாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது சிறப்புக்குரியது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர்.  குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கள் பிள்ளைகளுடன் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு வருகை தந்து கண்டு மகிழ்கின்றனர்.

மேலும் வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லாமல் ஆங்காங்கே சாலையோரங்களிலும் தங்கும் விடுதியின் அருகிலும் நிறுத்தி விடுவதால் சுற்றுலாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலைகளைக் கடந்து செல்ல கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நோக்கி செல்லும் போது மேலிருந்து கீழே வரும் வாகனங்கள் மற்றும் மேலிருந்து கீழே செல்லும் வாகனங்கள் கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த போதுமான இட வசதி ஏற்படுத்த கோடை விழாவுக்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: