ஆப்கன் டிவி சேனல்களில் கண்கள் மட்டும் தெரியுமாறு பர்தாவுடன் திரையில் தோன்றும் பெண் தொகுப்பாளர்கள்!!

காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் கண்கள் மட்டும் வெளியே தெரியும் வகையில் முகத்தை பர்தாவால் மூடியபடி திரையில் வர வேண்டும் என்ற தாலிபான் அரசின் உத்தரவு நடைமுறைக்கு வந்தது. ஆப்கானில் உள்ள அனைத்து பெண்களும் பொது இடங்களில் முகத்திரை அணிய வேண்டும் என்றும் அவ்வாறு அணிய மறுத்தால் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் 2 வாரங்களுக்கு முன்பு தாலிபான்கள் உத்தரவிட்டு இருந்தார்கள்.

இதற்கு ஆப்கானில் உள்ள மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தொலைக்காட்சிகளில் பெண் தொகுப்பாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் திரையில் தோன்றும் போது, முகத்தினை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று கடந்த புதன்கிழமை தாலிபான்கள் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இது குறித்த தாலிபான்களின் நகல் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆப்கான் டிவி தொகுப்பாளர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. முகத்தை மறைக்கும் ஆடை அணியாத பெண் தொகுப்பாளர்களை நீக்கவோ அல்லது வேறு பணி வழங்கவோ தாலிபான்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். ஆப்கானில் தாலிபான்கள் தன்வசப்படுத்தியதில் இருந்து பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான மேல்நிலை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. தாலிபான்களின் அடுத்தடுத்து ஒடுக்குமுறைகளால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: