×

சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் ஆய்வு 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை  மீன் மார்க்கெட்டில் மீன்களின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு  பாதுகாப்புத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு புகார்கள்  வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார்  உத்தரவின் பேரில் என்.ராஜா தலைமையிலான அதிகாரிகள் குழு, மாநகராட்சி  துப்புரவு ஆய்வாளர் மாப்பிள்ளை துரை தலைமையிலான குழுவினர் நேற்று காலை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்பட்டது  கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சரியான விதிமுறைகளை பயன்படுத்தி  பதப்படுத்தப்படாத மீன்களும் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 300 கிலோ அழுகிய  மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு,  மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு அவை  அழிக்கப்பட்டன. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மீன்கள் 18  டிகிரி செல்சியஸ் அளவில் பதப்படுத்தப்பட வேண்டும். ஆனால் மார்க்கெட்டில்  அவ்வாறு இல்லை. மேலும் அழுகிய மீன்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.  இது தவறான போக்கு.

இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள்  நடத்த இருக்கிறோம். சிந்தாதிரிப்பேட்டை போல நகரில் உள்ள இதர மீன் மார்க்கெட்களிலும் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும். விதிமுறை மீறல் தொடர்பாக உரிய  நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். அதிகாரிகளின் இந்த  அதிரடி ஆய்வுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதே போன்று  ஆய்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். மீன்பிடி  தடைக்காலம் காரணமாக ஆழ்கடலுக்கு படகுகள் செல்லாத நிலையில் மீன்களுக்கு  தட்டுப்பாடு இருந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து அதிக இறக்குமதி  காரணமாக மீன்கள் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Sindanatrippetta ,Fish Market , Chintadripet, fish market, seizure of rotten fish, food safety department officials
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து 10 பேர் கைது வேலூர் மீன் மார்க்கெட்டில் தகராறு