×

கற்பித்தல் என்னும் கலை

நன்றி குங்குமம் தோழி

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை வேறு. இப்பொழுது இருக்கும் காலகட்டம் வேறு. விஞ்ஞான முன்னேற்றங்கள் மாற மாற நம் வசதிகளும், எதிர்பார்ப்புகளும் அதற்கேற்றாற்போல் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. ராஜ பரம்பரையில் குருகுலம் அனுப்பி படிக்க வைத்தார்கள். குருவுக்குச் சேவை செய்வதும், அவர் வீட்டிற்குத் தொண்டு செய்வதும் சிஷ்யர்கள் கடமையாக இருந்தது.

‘குருஜி’ என்றால் அப்படியொரு பக்தி. பின் பள்ளிகள் சென்று கல்வி பயிலும் காலம் ஏற்பட்டது. ஆசிரியர் என்றால் மாணவர்கள் ஒரு அடி தள்ளியே நின்றார்கள். அது பயம் என்று சொல்வதைவிட ‘மரியாதை’ என்றுதான் கூற முடிந்தது. பெற்றோரும் கண்டித்து சொல்லித்தரச் சொன்னார்கள். கொஞ்சம், கொஞ்சமாக மாறி கண்டிப்பு குறைந்து நட்பாக மாறியது. நட்பாகப் பழகி நல்லது, கெட்டது சொல்லித்தர முடிந்தது. இன்றைய காலம் சமூக சூழலுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

பிறக்கும்போதே குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன்தான் இருக்கிறார்கள். நாமேகூட அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ‘கணிப்பொறி’ யுகம் அவர்களை இயக்குகிறது. ‘ஹாய் மிஸ்’ ‘ஹாய் சார்’ என்றுதான் அழைப்பார்கள். அவர்கள் வளரும் சமுதாயம் அப்படித்தான். பிள்ளைகள் சமுதாயம் எப்படியோ, அதற்கேற்றவாறுதான் கற்பிப்பவரும் தன்னை மாற்றிக்கொள்கிறார். அவர்கள் மனநிலையைப் பொறுத்து, நாம் நடத்துதல் அவசியம்.

தெரியாமல் தவறு செய்வது என்பது எல்லோருக்குமே ஏற்படக்கூடிய சூழல்தான். தெரிந்தும், தெரியாமலும்கூட தவறு செய்யக் கூடாது என்பதற்காகவே ஒரு காலகட்டத்தில் ‘‘ஹானஸ்டி ஷாப்’’ (Honesty Shop) என்று ஒன்று இருந்தது. படிக்கும் பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருந்தன. பேனா, பென்சில், ரப்பர், பேப்பர், நோட்டுப்புத்தகங்கள், கலர் பென்சில்கள், உலக வரைபடங்கள், கார்பன் பேப்பர்கள் ஆகிய அனைத்தும் விற்கப்பட்டன. அப்பொழுதெல்லாம் ‘பிரிண்ட்’ எடுப்பதற்கான கம்ப்யூட்டர், பிரிண்டர் வசதிகள் கிடையாது.

ஏதேனும் நகல் எடுக்க நினைத்தால், கார்பன் பேப்பரைத்தான் பயன்படுத்துவர். எனவே அதுவும் அத்தியாவசியத் தேவைப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. ஒரு முழு அறை ‘ஸ்டோர்’ போன்று இருந்தது. ஆனால் அதை பார்த்துக்கொள்ள யாரும் உறுப்பினர் கிடையாது. நிர்வாகி வந்து அழகுற அடுக்கி, கதவைத் திறந்து வைப்பார். பின் அவர் வேலையைப் பார்க்கச்சென்று விடுவார்.

‘ஹானஸ்டி ஷாப்’  திறக்கும் நேரம், மூடப்படும் நேரம் வெளியில் எழுதிப் போடுவார்கள். அந்த நேரத்தில் நாம் சென்று, வேண்டிய பொருளை எடுத்துக்கொண்டு, அதற்கான விலையை அங்குள்ள பணப்பெட்டியில் போட்டுவிட வேண்டும். திடீரென வகுப்புத் தேர்வுக்கு எழுத, பேப்பர் எடுத்துவர மறந்திருந்தால், ஓடிப்போய் இரண்டு பேப்பர் எடுத்து வருவர். அதற்கான காசை போட்டுவிட்டு வருவர். காசு கொண்டு வராதவர்கள்கூட நண்பர்களிடமோ, ஆசிரியரிடமோ வாங்கித் தவறாமல் காசைப்போட்டுவிட்டு, மறுநாள் வாங்கியவரிடம் திருப்பித் தருவர். இன்றைய நாட்கள்போல், அப்பொழுது ‘கேமரா’கூட கிடையாது. இதுபோல், எங்கும் எதிலும் நடந்துவிட்டால், நேர்மையும் நம் ரத்தத்தில் ஊறிவிடும்.

பிள்ளைகள் சிறு வயதிலேயே பிறர் பொருளுக்கு ஆசைப்படாமலும், நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் தொடங்கப்பட்டது. அத்தகைய ‘நேர்மையான கடை’ என்பது. ஒவ்வொரு நாளும் மாலையில் கடையின் பொறுப்பாளர், குறைந்திருந்த பொருட்களின் விலையைக் கணக்கிட்டு சரிபார்த்துக் கொள்வார். இன்றுவரை இதுபோன்ற நிகழ்வுகளை, பிள்ளைகளுக்குச் சொல்லும்பொழுது, நமக்கு அதில் ஒரு பெருமிதம்.

எப்படி ‘ஹிமேன்’ (Heman) ‘சக்திமான்’ போன்றவற்றைப் பார்த்தால், தன்னையும் சக்தி படைத்தவனாக பிள்ளைகள் பாவித்து நடக்கிறார்களோ, அதுபோன்ற உண்மை-நேர்மையைக் குறிக்கும் நிகழ்வுகளைக் கூறுவதன் மூலம் நேர்மை, நியாயம், உண்மை போன்ற குணங்கள் இயற்கையாகவே அமைந்துவிடும். இவற்றையெல்லாம் நினைக்கும்பொழுது நாமெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இளமையை கழித்திருக்கிறோம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

மாலை வீட்டுக்கு பள்ளியிலிருந்து திரும்பினால், காலகட்டத்தில் கிடைக்கும் பழங்களும், பாலும்தான் நமக்கு மாலை நேர சிற்றுண்டியாக இருந்தது. இப்பொழுது பெயர் தெரியாத அயிட்டங்கள் அழகான பாக்கெட்டுகளில் காணப்படுகின்றன. புளித்துப்போன மாவைக்கூட காய்கறிகளால் அலங்கரித்து, உடலுக்கு ஒத்துக்கொள்ளும் விதத்தில் அம்மா தயார் செய்து தருவார். அதை சாப்பிட்டு விட்டு ஓடியாடி விளையாடச் செல்வது பழக்கம். ஆறு மணி ஆனால் குளித்துவிட்டு, வீட்டுப்பாடம் செய்ய வேண்டும். படிக்க வேண்டும். பாரதி சொன்ன ‘‘ஓடி விளையாடு பாப்பா’’
நடைமுறையில் காணப்பட்டது.

இப்பொழுது ‘பீட்சா’ சாப்பிட்டாலும், செரிமானம் ஆவதற்குக்கூட ஓடியாட முடியவில்லை. ‘கம்ப்யூட்டரில்’தான் விளையாட முடிகிறது. மாணவர்களுக்கு இதனால் மனஅழுத்தம்தான் ஜாஸ்தியாகிறது. பலப்பல விளையாட்டுப் பயிற்சிகளுக்குப் பணம் செலவழித்து, விளையாட வேண்டிய நிர்ப்பந்தம். அனைத்திலும் வெற்றி பெற்று, கோப்பைகளும், மெடல்களும் குவித்தாலும், இயற்கை விளையாட்டுக்களை ஒப்பிட முடியாமல் ஆகிவிட்டது. ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தைந்து என்று நினைக்கிறேன்.

நாங்கள் படித்த பள்ளிக்கு மைசூர் மஹாராஜா வந்திருந்தார். ஊரே அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. வெற்றி பெற்றவர்களுக்கு மஹாராஜா கையால் பரிசுகள் வழங்கப்பட்டன. நான் பெற்ற ‘மெடலை’ என் தந்தை எல்லோரிடமும் காட்டி ‘மைசூர் மஹாராஜா’ தந்தது என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டார். அப்படியெல்லாம் ஊக்கப்படுத்த பலப்பல உறவுகளும் உடனிருந்தனர். ஆனால் இன்று பிள்ளைகள் பாவமாக காணப்படுகிறார்கள். தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்வதால், முக்கியமான பள்ளி விழாக்களுக்குக்கூட வரமுடியாத நிலை.

ஆனால் குழந்தைகள் என்னவோ திறமையில் முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மூன்று வயது எல்.கே.ஜி.படிக்கும் குழந்தைகூட மாறுவேடப் போட்டியில், பெரியவர்களை மிஞ்சும் வகையில் மழலையில் கலக்குகிறது. இன்றைய தொழில்நுட்பமும், மீடியாக்களும் அவர்களை வெளி உலகிற்கு படம் பிடித்துக்காட்டுகின்றன. பிள்ளைகள் அதிபுத்திசாலியாக இருப்பதால், எவற்றையும் எளிதில் புரிந்துகொண்டு விடுகிறார்கள். அவர்கள் மனதை புரிந்துகொண்டால் போதும்! அறிவுப்பசிக்கு நிறைய ஆகாரம் கேட்பார்கள். அதற்கு கற்பிப்பவர் தன்னை தயார் செய்து கொள்வதுதான் நம்முடைய நோக்கம். கேள்வி கேட்கக் கேட்க சரியான பதில் நம்மிடம் இருந்தால் போதும்.

இந்திய மண் புனிதமானது. நம் நற்பண்புகள் பெரிய நாடுகளில்கூட காணப்படுமா என்று பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, பள்ளியில் படித்த மாணவன் ஒருவன் தன் தந்தையின் வேலை நிமித்தமாக திடீரென வெளிநாடு செல்ல நேர்ந்தது. பள்ளிப்படிப்பு எப்படி அங்கு சமாளிக்கப்போகிறான் என்று நினைத்தோம். காரணம், முழுவதும் வேறு கலாச்சாரம், வேறு மொழி, வேறு முறைகள் இவற்றுடன் நம் தமிழ் மாணவன் ஒத்துப்போக வேண்டுமே என்றெல்லாம் மனதில் அச்சங்கள் எழுந்தன.

அந்தப்பையன் அங்கு சென்று, நம் வளர்முறைப்படி பிறருக்கு உதவி செய்ய ஆரம்பித்திருக்கிறான். தெரியாதவர்களுக்கு பள்ளி முடிந்து, கணக்கில் உதவியிருக்கிறான். வகுப்பறையில் ஆசிரியருக்குத் தேவையான பொருட்களை மேசை மீது தயாராக வைத்திருக்கிறான். பாட சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி பரிசோதனைகளை படமாக்கி அதன்மூலம் செயல்படுவதை சக மாணவர்களுக்கு சொல்லித் தந்திருக்கிறான். அனைவரும் வீட்டிற்குக் கிளம்பும் சமயம், விட்டுச்செல்லும் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருந்து, அவரவரிடம் ஒப்படைத்திருக்கிறான்.

வெகு விரைவில் அவர்கள் அத்தனை பேரிடமும் நன்மதிப்பைப் பெற்றுவிட்டான். இதில் எதுவுமே அவன் புதிதாக முயற்சித்தோ, மற்றவர்களை ஈர்ப்பதற்காகவோ செய்யவில்லை. இத்தகைய கடமைகளை அவன் இங்கு தன் வகுப்பில் செய்திருக்கிறான். இங்குள்ள ஒவ்வொரு மாணவரும் இதுபோன்ற செயல்களில் பிறருக்கு உதவுவதை தன் கடமையாகக் கொண்டுள்ளனர். அதே பழக்கம், நாம் எங்கு சென்றாலும் கடைபிடிக்க ஆரம்பித்து விடுகிறோம். அதுபோல் அந்தப் பையன் அனைத்தையும் செய்ய, வகுப்பாசிரியர் வியப்படைந்திருக்கிறார். ஏனெனில் அங்குள்ள பழக்க வழக்கங்கள், மாணவர்களின் நடைமுறை நம் கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது.

திடீரென இப்படியொரு மாணவன் உதவிகரமாக இருந்தது ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. அவர் எழுதியிருந்த கடிதத்தின் நகலை நானும் பார்க்க நேர்ந்தது. அதில், ‘‘உங்கள் பையனின் உதவி மனப்பான்மையும், புத்திசாலித்தனமும் எங்களைக் கவர்ந்தது. இதுபோன்ற மாணவனை எங்கள் பள்ளியில் சேர்த்ததற்காக நன்றி சொல்கிறோம், பெருமைப்படுகிறோம், அவனை இங்கு கொண்டுவந்து சேர்த்த கடவுளுக்கு நன்றி’’ என்று எழுதப்பட்டிருந்தது. இது மாணவனுக்கும் பெற்றோருக்கும் கிடைத்த பாராட்டு மட்டுமல்ல; அவன் படித்த பள்ளி, கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் இவர்களையும் சாரும்.

எல்லாவற்றிற்கும் மேல் நம் இந்தியக்கல்வி முறையும் கலாச்சாரமும் நம்மை சரியான வழியில் நடத்திக்கொண்டு செல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு பயின்று விட்டு, கடல் கடந்து வேறு பள்ளியில் பெருமைப்படுத்தப்படுகிறானென்றால், அவன் அஸ்திவாரம் பலமாக அமைந்துவிட்டது என்றுதான் அர்த்தம். இதுபோன்று புலம் பெயர்ந்த பல மாணவர்கள், மிகப்பெரிய உலக அளவில் பேசப்படும் கம்பெனிகளில், மிக உயர்ந்த பதவிகளில் ஜொலிக்கிறார்கள்.

நம் இந்தியக் கல்வி முறை படிப்புடன், ஒழுக்கத்தையும், கலாச்சாரத்தையும் கற்றுத்தருகிறது. அது நம் உடலில் ஊறி விடுகிறது. சில விஷயங்களில்தான் பிள்ளைகளுக்கு சுதந்திரம் தரப்படுகிறது. வேலைக்குச்சென்று சம்பாதிக்கும் வரை பெற்றோர்கள்தான் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், மேலை நாடுகளில், ஒரு சில இடங்களில் பிள்ளைகள் படிக்க விரும்பவில்லையென்றால், அவர்களை நிர்பந்திக்கக் கூடாது என்றுகூட சொல்வதுண்டு. ஒரு சில ஆசிரியர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

அவர்கள் எந்தெந்த வகுப்பிற்குச் சொல்லித் தருகிறார்கள் என்று கேட்டதும், எனக்கு ஒரு நிமிஷம் அதிர்ச்சியான தகவலாகப்பட்டது. காரணம், ஒருவர் கே.ஜி. வகுப்பு கவுன்சிலர் என்றும், மற்றொரு ஆசிரியை ‘கிரேட்’ (grade) ஒன்று மற்றும் இரண்டிற்கு கவுன்சிலர் என்றும் சொன்னார்கள். ஆசிரியர் அளவுக்கு கவுன்சிலர்கள் தேவைப்பட்டால், பிள்ளைகளின் படிப்பில் பலவிதமான இடற்பாடுகள் சரி செய்ய வேண்டியிருக்கும் என்பது புரிகிறது.

அரசுப் பள்ளிகளில் நன்கு படித்து, எதிர்காலத்தை தானே தீர்மானித்துக்கொண்டு அதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஓரளவு படித்தால்கூட போதும், இசைக்கற்றல், நீச்சல், ஸ்கேட்டிங் போன்ற பலவற்றை முக்கியமாகக் கருதுகிறார்கள். நம் பிள்ளைகள் படிப்பிற்கு முக்கியத்துவம் தந்து, மற்றக் கலைகளை பகுதி நேரங்களில் பயில விரும்புகிறார்கள். எதிலும் மிகச்சிறந்தனவற்றைச் செய்ய நினைக்கிறார்கள். எனவேதான் எங்கு சென்றாலும் தங்கள் துறைகளில் மேம்பட்டுத் திகழ்கிறார்கள். இது நம் மண்ணின் பெருமை.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!