×

மதுரவாயல் முதல் துறைமுகம் வரை ஈரடுக்கு பறக்கும் சாலை 110 பழைய தூண்களை பயன்படுத்த முடிவு

சென்னை: மதுரவாயல் முதல் துறைமுகம் வரை ஈரடுக்கு பறக்கும் சாலைக்காக கடந்த 2007ல் அமைக்கப்பட்ட 110 தூண்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திமுக ஆட்சியின்போது 2007ல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்லவும் ரூ.1,815 கோடி செலவில் மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு பறக்கும் சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அதிமுக அரசு தடை விதித்தது.

இந்த நிலையில் மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது. மதுரவாயல்-துறைமுகம் இடையே சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கும் வகையில் முதல் அடுக்கில் கன்டெய்னர் லாரிகள், கீழடிக்கில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலை ஆக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை சுமார் 20 கி.மீ தூரம் மேலடுக்கு பாலம் அமைக்கப்படுகிறது. கோயம்பேடு முதல் துறைமுகம் வரை சுமார் 14 கி.மீ தூரம் கீழடுக்கு பாலம் அமைக்கப்படுகிறது. மேலடுக்கு சாலையில் துறைமுகத்துக்கு போகும் கனரக வாகனங்கள் அதன் வழியாக சென்று விடும். கீழடுக்கு என்பது பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். 13 இடங்களில் மேம்பாலத்தில் இறங்கும் வகையில் இறங்கு பாலம் அமைக்கப்படுகிறது. இதில், 7 நுழைவு பாதையாகவும், 6 வெளியே செல்லும் பாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்த திட்ட மதிப்பீட்டின் படி ரூ.5855 கோடி ஆகும். இரண்டாம் அடுக்கில் அமைய உள்ள நான்கு வழி சாலை நேரடியாக மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை செல்கிறது. இதில் கன்டெய்னர் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் 20.5 கி.மீ மேம்பாலத்தில் 9 கி.மீ தூரம் சென்னை கூவம் நதி வழியாக செல்கிறது. இந்த கூவம் நதியோரம் ஏற்கனவே 125 தூண்கள் அமைக்கப்பட்டன. இதில், 110 தூண்கள் பயன்படுத்தப்படவிருக்கிறது. மீதமுள்ள தூண்கள் இடிக்கப்படவிருக்கிறது. தற்போது சாலை அமைக்கும் பணிக்காக ரூ.470 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், மதுர வாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பால திட்டத்துக்கு வரும் 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.  இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். துறைமுகத்துக்கு பொருட்கள் வருவது குறைவாக உள்ளது. இந்த திட்டம் வந்தால் துறைமுகத்துக்கு சரக்கு பொருட்கள் வருவது அதிகரிக்கும். இந்த பாலம் வந்தால் மதுரவாயல், கோயம்பேட்டில் இருந்து துறைமுகத்திற்கு 20 நிமிடத்தில் சென்று விடலாம் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Maduravayal , Maduravayal, Port, Flying Road,
× RELATED மதுரவாயலில் உரிய ஆவணம் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்