×

அணை, ஏரிகள், நிலத்தடி நீரின் விவரங்களை உள்ளடக்கிய நீர்வள தகவல் ேமலாண்மை அமைப்பு உருவாக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு: நீர்வளத்துறை உயர்அதிகாரி தகவல்

சென்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 90 அணைகள், 14,098 ஏரிகள் உள்ளது. இதன் மூலம், குடிநீர், பாசனம் மற்றும் இதர தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து வருகிறது. அதே நேரத்தில், மாநிலத்தில் நிலத்தடி நீரும் முக்கிய பங்காற்றி வருகிறது. எனவே தான், மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப நீர்வள கட்டமைப்புகளை மேம்படுத்துவது, நிலத்தடி நீரை பெருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்பணிகள், நீர்வள தகவல் ேமலாண்மை அமைப்பின் தரவுகள் மூலம் மேம்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த தரவுகளுக்காக ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதனாலேயே கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதே போன்று நீர்வள தகவல் மேலாண்மை அமைப்பு தரவுகளை தெரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது.

இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் நீர்வள தகவல் மேலாண்மை அமைப்புகளை உருவாக்கும் வகையில், மாநிலத்தில் நிலத்தடி நீர், நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், சிறுநீர் பாசன ஏரிகள் போன்ற மேற்பரப்பு கூறுகளின் தரவுகளை கொண்ட அனைத்து நீர் தொடர்பான தரவு உருவாக்கப்படுகிறது. மேலும், இதில், நீர் விநியோகம் மற்றும் நீரின் தேவை, செயல்பாடு மற்றும் சுற்றுச்சூழல் காரணி ஆகியவற்றை கொண்ட புவிசார் தகவல் அமைப்பு கட்டமைப்புகளை உள்ளீடு செய்து தரவு மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் திட்டமிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்புக்காக நபார்டு வங்கியின் நிதியுதவியின் கீழ் ரூ.30 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து தற்போது, இதற்கான டெண்டர் விட்டு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம், ஓருங்கிணைந்த நீர் ஆதாரங்கள் தொடர்பான தரவுகளை தேடவும், அணுகவும் முடியும். மேலும், ஒருங்கிணைந்த நீர் ஆதாரங்களுக்காக தரவுகளை உடனடியாக பெற முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Resources , Dam, Lakes, Groundwater, Water Resources Information Management System, Water Resources Authority
× RELATED பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து...