ஊட்டி பகல்கோடு கிராமத்தில் தோடர் பழங்குடியின மக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்: குடியிருப்புகளுக்கே சென்று கோரிக்கை மனு பெற்றார்

சென்னை: ஊட்டி-கூடலூர் சாலையில் பகல்கோடு கிராமத்துக்கு சென்று தோடர் பழங்குடியின மக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்றார். ஆண்கள், பெண்களுடன் நடனமாடி உற்சாகப்படுத்தினார்.  நீலகிரி  மாவட்டம், ஊட்டிக்கு கடந்த  19ம் தேதி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 20ம் தேதி ஊட்டி  தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்து  பார்வையிட்டார்.

நேற்று முன்தினம் முத்தோரை குழந்தைகள் மையத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஊட்டி அரசு  கலை கல்லூரி மைதானத்தில் நடந்த  அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  பங்கேற்று ஊட்டி-200  திட்டம் துவக்கம், ரூ.118.79 கோடி மதிப்பீட்டில்  புதிய பணிகளுக்கு  அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்,  9,500  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீலகிரியை  கண்டறிந்த ஜான்  சல்லிவனின் மார்பளவு வெண்கல சிலையையும் திறந்து வைத்தார்.

இந்நிலையில்   முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை ஊட்டி-கூடலூர் சாலையில்   சூட்டிங்மட்டம் பகுதியில் உள்ள பகல்கோடுமந்து என்ற பழங்குடியின   கிராமத்திற்கு சென்றார். அங்கு தோடர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசை   வாத்தியங்களை இசைத்து அவரை வரவேற்றனர். பின்னர் தோடர் பழங்குடியின  மக்களின்  குடியிருப்புகளுக்கே சென்று அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அங்கிருந்த சிறுமிகளிடம் உரையாடினார். பின்னர், அப்பகுதியில்  உள்ள தோடர்  மக்களின் கோயிலை பார்வையிட்டார். அப்பகுதியில் தோடர் எருமை  இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு  மையம் அமைப்பதற்காக தேர்வு  செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார்.  தொடர்ந்து அங்குள்ள சமுதாய  கூடத்தில் தோடர் பழங்குடியின மக்களுடன்  கலந்துரையாடினார்.

அப்போது  தோடர் பழங்குடியின மக்கள், மாவட்ட அளவில்  ஆதிதிராவிடர், பழங்குடியின  மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு தனி  இணைய முகப்பு (போர்டல்)  ஆரம்பித்ததற்காக நன்றி தெரிவித்தனர். மேலும் ‘‘பகல்கோடு மந்து மற்றும் பிற  கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளை சீரமைத்து  தர வேண்டும். கால்நடைகளின்  மேய்ச்சல் நிலத்தை அதிகரிக்க வேண்டும். கூடலூர்,  பந்தலூர் பகுதிகளில்  இருந்து பல்வேறு பணிகளுக்கு ஊட்டி வரும் பழங்குடியினர் மற்றும்  பொதுமக்கள் தங்கி ஓய்வெடுக்க விடுதி அமைத்து தர வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து கிராம  மக்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘நீலகிரி  நிலத்தை  இந்த அரசு பாதுகாக்கும். மலைகளோடு சேர்ந்து பழங்குடியின  மக்களையும், இந்த  அரசு பாதுகாக்கும். பகல்கோடுமந்து பகுதியில் பால்  பதப்படுத்தும்  நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதி  மக்களுக்காக எம்.பி. தொகுதி நிதியில் இருந்து சமுதாய கூடம் கட்டித் தரப்படும்.  சாலை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த உதவி   தேவைப்பட்டாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். அரசு அனைத்து வித உதவிகளையும்   செய்து தர தயாராக உள்ளது’’ என்றார்.

தொடர்ந்து தோடர் பழங்குடியின மக்கள்   ஆண்கள் மற்றும் பெண்களுடன் சேர்ந்து முதல்வர்   மு.க.ஸ்டாலின் நடனமாடினார். பின்னர் தோடர் பழங்குடியின மக்கள் இசை கருவிகளை   முதல்வரிடம் வாசித்து காண்பித்தனர். கொட்டும் மழையையும் பாராமல் தோடர்   பழங்குடியின மக்களுடன் முதல்வர் கலந்துரையாடல்   நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர்   ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ராசா, மாவட்ட கலெக்டர் அம்ரித், திமுக  மாவட்ட  செயலாளர் முபாரக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: