உடலை பேரலில் அடைத்து நிலத்தில் புதைத்த கொடூரம் தந்தையின் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: pமகனைப்பிடிக்க 5 தனிப்படைகள் pபுதைக்க உதவிய ஆட்டோ டிரைவர் கைது

சென்னை: காவேரிப்பாக்கத்தில் புதைக்கப்பட்ட தந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்தனர். சென்னை வளசரவாக்கம், ஆற்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (80). இவருக்கு குணசேகரன் (55) என்ற மகனும், காஞ்சனா, பரிமளா, யமுனா என்ற 3 மகள்களும் உள்ளனர். குமரேசனுக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் முதல்தளத்தில், அவரது மகன் குணசேகரன்  உள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்கிறார். 2வது தளத்தில் குமரேசன் தனது மகள் காஞ்சனாவுடன் வசித்துவந்தார்.

இந்நிலையில், காஞ்சனா கடந்த 15ம் தேதி சென்னை மந்தைவெளியில் உள்ள தனது கட்டிடத்தை புதுப்பிக்க சென்றுள்ளார். பின்னர், கடந்த 19ம் தேதி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காஞ்சனா பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, வீடு முழுக்க ரத்த கறையுடன், துர்நாற்றம் வீசியுள்ளது. ஆனால், அவரது தந்தை குமரேசன், அண்ணன் குணசேகரன் ஆகியோரை காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த காஞ்சனா வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில், தந்தை, மகனுக்கு இடையே சொத்து சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், குமரேசனை அடித்து கொலை செய்துவிட்டு, அவரது சடலத்துடன் தலைமறைவானதும் தெரியவந்தது. இதையடுத்து, குணசேகரன் கடைசியாக பேசிய செல்போன் எண்களை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கடந்த 17, 18ம் தேதிகளில், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் புரோக்கர் வெங்கடேசன் என்பவரிடம் குணசேகரன் பேசியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார்,  காவேரிப்பாக்கம் விரைந்துவந்து, ரியல் எஸ்டேட் புரோக்கர் வெங்கடேசனிடம் விசாரணை செய்தனர். அப்போது, தந்தையின் சடலத்தை பேரலில் எடுத்துவந்து காவேரிபாக்கத்தில் குணசேகரன் புதைத்தது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சொத்து தகராறில் குமரேசனை அடித்துக்கொன்ற மகன் குணசேகரன் அவரது உடலை வெட்டி பேரலில் அடைத்து கொண்டு வந்து புதைத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது.

மேலும் சடலத்தை புதைக்க குணசேகரனுக்கு உதவியதாக ஆட்டோ டிரைவர் திருமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இதை தொடர்ந்து,  நேற்று காவேரிப்பாக்கத்தில் புதைக்கப்பட்டிருந்த அந்த பேரலை தாசில்தார், ஆர்.டி.ஓ. மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் தோண்டி எடுத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே தலைமறைவாக உள்ள குணசேகரனைப்பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, புதுவை என பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர். மேலும், குணசேகரன் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தப்பிச் சென்றுள்ளரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: