மக்கள் இல்லம் தேடி மருந்து கொடுக்கும் திட்டம்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: அரசு மருத்துவமனையில் இலவசமாக கிடைக்கும் மருந்துகளை மருந்தாளுநர்கள் மூலம் நோயாளியின் வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் பகுதியில் ஒரு தனியார் ரிசார்ட்டில் மருந்து சந்தைப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், 2 நாள் கருத்தரங்கு நேற்று நடந்தது.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் இளவரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கருத்தரங்கில் குத்துவிளக்கேற்றி விழா மலரை வெளியிட்டார். பின்னர், ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘அரசு மருத்துவமனைகளில் தரம் உயர்ந்த மருந்துகள் இலவசமாக கிடைக்கிறது. அரசு மருத்துவமனையில் உள்ள மருத்தாளுநர்கள் மூலம், இந்த மருந்துகளை மக்களை தேடிச்சென்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளதால், கரும்பூஞ்சை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 3ம் தேதி ஒரு குடும்பத்தில் தாய், மகளுக்கு பரிசோதனை செய்ததில் இருவருக்கும் பாசிட்டீவ் என வந்தது. கை, கால்கள் மற்றும் உடல் வலி இருந்தால் மரபியல் ரீதியாக பரிசோதனை செய்ய வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மார்ச், ஏப்ரல் மாதத்தில் ஒமிக்ரான் மட்டும்தான் இருந்தது.

தற்போது, டிஏ 3 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரம் பேரில் 3 பேருக்கு மட்டும் தொற்று உள்ளது. சென்னையில் பரிசோதனை செய்யும்போது ஆயிரம் பேரில் 12 முதல் 15 பேருக்கு தொற்று உள்ளது. மர்ம காய்ச்சலை கூட தற்போது ஒமிக்ரான் என்று சொல்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: