மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்ப நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. திமுக சார்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் திமுக கூட்டணி சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், அதிமுகவில் மாநிலங்களை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுகவில் தென் மாவட்டத்திற்கு ஒரு சீட், வட மாவட்டத்திற்கு ஒரு சீட் என பிரித்து வழங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் அதிமுக சார்பில் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது.

இந்தநிலையில், உருவாக உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும்  அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை  உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வேட்பு  மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி  தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது  அலுவலகத்தில் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3  மணி வரை வழங்கலாம். பொது விடுமுறையாக  அறிவிக்கப்பட்டுள்ள 28ம் தேதி (வங்கிகளுக்கு நான்காவது சனிக்கிழமை) மற்றும்  29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தவிர பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீது ஜூன் 1ம் தேதி பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ள கடைசி நாள் 3.6.2022. வாக்குப் பதிவு தேவைப்படின் சட்டமன்ற குழுக்கள் அறையில் ஜூன் 10ம் தேதி நடைபெறும். 13ம் தேதியுடன் தேர்தல் நடவடிக்கைகள்  முடிவடைகிறது.

Related Stories: