மழை மற்றும் வரத்து குறைவால் தக்காளி, பீன்ஸ் விலை ரூ.110ஐ தொட்டது: கேரட், அவரைக்காய் விலையும் எகிறியது

சென்னை: மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக, பீன்ஸ், தக்காளி போன்ற காய்கறிகள் விலை அதிகரித்தது. இதனால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து  தினமும் 600 வாகனங்களில் 6,000 டன் காய்கறிகள் வருவது வழக்கம். இந்நிலையில், மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக, நேற்று காலை 400 வாகனங்களில் 4,500 டன் காய்கறிகள் வந்துள்ளன. இதன்காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் ஒருகிலோ பீன்ஸ் ரூ.80க்கும், கேரட் ரூ.25க்கும், அவரைக்காய் ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை ஒரு கிலோ பீன்ஸ் ரூ.110க்கும் அவரைக்காய் ரூ.80க்கும் கேரட் ரூ.35க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னை புறநகரில் உள்ள சில்லறை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120க்கும், கேரட் ரூ.45க்கும், அவரைக்காய் ரூ.90க்கும், நாட்டு தக்காளி ரூ.110க்கும், பெங்களூரூ தக்காளி ரூ.130க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில்,‘‘

மழை மற்றும் வரத்து குறைவால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி, பீன்ஸ் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேரட், அவரைக்காய் விலையும் அதிகரித்துள்ளது. அதிக விலையில் காய்கறிகள் விற்பனை செய்யபடுவதால், அவற்றை வாங்க எளிய மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தக்காளி விலையை குறைக்க அண்ணாநகர், முகப்பேர், அடையாறு ஆகிய பகுதிகளில் சென்னை பசுமை பண்ணை கடைகளில் குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கோயம்பேடு மார்க்கெட்டிலும் ஏற்படுத்தி கொடுத்தால் எளிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இன்னும் சில நாட்களுக்கு தக்காளி விலை உயரக்கூடும்.’’இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: