×

நிலத்தடி நீர் திருடுபோவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு: வரைவு சட்டத்தை இணையதளத்தில் வெளியிட திட்டம்

சென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு, நிலத்தடி நீர் வணிக ரீதியாக திருடப்படுவதே  காரணம். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நிலத்தடி நீர் வரைவு மேலாண்மை சட்டத்தை உருவாக்குவதற்கு ஒரு உயர் மட்டக்குழு மற்றும் வரைவு சட்டம் மற்றும் விதிகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டன.

இக்குழுவில் நீர்வளத்துறை, வருவாய்த்துறை, சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அடங்கியவர்கள் இடம் பெற்றனர். இந்த குழு சார்பில் பல்வேறு மாநிலங்களின் நிலத்தடி நீர் சட்டங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தும் மற்றும் தொடர்புடைய துறைகளுடன் கலந்துரையாடல் மூலம் நிலத்தடி நீர் வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரைவு சட்டம் தொடர்பாக கடந்த நவம்பர் 25ம் தேதி தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்நிலத்தடி நீர் திருடப்படுவது தெரிய வந்தால், அந்த ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பது, அபராதம் வசூலிப்பது, சிறை தண்டனைக்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அந்த சட்டத்தில் இடம் பெறுகிறது. இந்த வரைவு சட்டம் தொடர்பாக பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துரைகளை பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், இந்த வரைவு சட்டம் தொடர்பாக இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Groundwater theft, public,
× RELATED பொதுப்பணி, நீர்வளத்துறையில் 36...