தமிழக அரசு சார்பில் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கை சென்றது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் ரணில் நன்றி

சென்னை: இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அடங்கிய கப்பல் நேற்று இலங்கைக்கு சென்றடைந்தது. இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அப்பொருட்களை வழங்க உரிய அனுமதி வழங்குமாறு 31.3.2022 அன்று டெல்லி சென்று பிரதமரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் இதுதெடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. நிவாரண பொருட்களை அனுப்ப அனுமதி வழங்குவது குறித்து 29.4.2022 அன்று சட்டமன்ற பேரவையில் தனித் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.

இந்தநிலையில், கடந்த வாரம் 18ம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சரக்குக் கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கப்பல் நேற்று கொழும்பு சென்றடைந்தது.

இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:

ரூ.2 பில்லியன் மதிப்பிலான பால் பவுடர், அரிசி மற்றும் மருந்து பொருட்கள் இந்தியாவிடம் இருந்து இன்று இலங்கைக்கு வரப்பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு செய்துள்ள மனிதாபிமான உதவிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: