பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம்: சுற்றுச்சூழல் துறை செயலாளர் தகவல்

சென்னை: பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை  ஏற்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான  நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை  திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிம்பர் 23ம் தேதி  தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் மஞ்சள் பை திட்டம் குறித்து  பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மஞ்சப்பை விற்பனை இயந்திரம் பெறும் ஒப்பந்தம் இறுதியாகி விட்டது. பொது இடங்களில் மலிவு விலையில் துணி பைகள் கிடைப்பது சவாலாக உள்ளது. சந்தை, பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது இடங்களில் இவற்றை வைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முதல் இயந்திரம் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மஞ்சள் பை கொடுக்கும் இயந்திரத்தில் ரூ.10 நாணயத்தை செலுத்தினால், மீண்டும் மஞ்சள் பை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணிப் பை வரும். அந்த இயந்திரத்தில் 40 பைகள் இருக்கும். மஞ்சள் பை தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு சிலருடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனை நிரந்தர அம்சங்களாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை, மக்கள் தங்கள் சொந்த பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது முதல் இதுவரை 170 பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. சமீபத்தில் 1700 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: