×

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவிப்பு பொறியியல் படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு: பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயம்

சென்னை: கட்டணக் குழுவின் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் பொறியியல், தொழில்நுட்பம், டிப்ளோமா படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், பேராசிரியர்களுக்கு 7வது சம்பள கமிஷனில் தெரிவித்துள்ள ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டணமானது வழக்கமான தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு அங்கீகாரம், கல்விக் கட்டணம், பாடப்பிரிவுகள் உள்பட அனைத்தையும் அகில இந்திய தொழில்நுட்பக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. இதில், பொறியியல் மற்றும் அது சார்ந்த படிப்புகளுக்கு குறைந்தபட்சம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது ஏஐசிடிஇ அமைப்புதான். கொரோனா காலத்துக்கு பிறகு ஏஐசிடிஇ அமைப்பு சமீபத்தில் எந்த பாடப்பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதன் பிறகு, பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை உயர்த்தி ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

அதன்படி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக், பிஆர்க், படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகநிர்ணயக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900 ஆகவும், அதிகபட்சமாக ரூ.1,40,900 ஆகவும் உயர்த்தி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், எம்இ, எம்டெக், எம்ஆர்க் போன்ற முதுகலை படிப்பிற்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3,04,000 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்ச கட்டணம் மற்றும் அதிகபட்ச கட்டணத்துக்குள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம். 3 ஆண்டு எம்சிஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500, அதிகபட்சமாக ரூ.1,94,100 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டு எம்பிஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் 7வது சம்பள கமிஷன் ஊதியத்தை வழங்கிட வேண்டும். உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என்று ஊதியம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தை குறைக்க கூடாது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எவ்வளவு உயர்வு?
பொறியியல் படிப்புகளுக்கு நடப்பில்  குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000 , அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என்றிருந்த நிலையில் தற்போது கட்டணம் உயர்ந்துள்ளது. டிப்ளோமா படிப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணயக் குழு, பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்துவருகிறது. இந்தநிலையில், ஏஐசிடிஇ பரிந்துரை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : All India Institute of Technology Education ,PE ,PITEC ,PRC , All India Institute of Technology, Engineering Studies, Fee Increase
× RELATED பி.இ.க்கு புதிய பாடத்திட்டம் ஜூலை...