எனது கருத்தையே பிரதமர் வெளிப்படுத்தினார்: கிச்சா சுதீப்

சென்னை: ‘தேசிய மொழி குறித்த எனது கருத்தையே பிரதமர் வெளிப்படுத்தி உள்ளார்’ என்று கன்னட நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார். பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் தனது டிவிட்டரில் பான் இண்டியா படம் குறித்த கருத்து வெளியிட்டார். அதில் ‘இந்தி தேசிய மொழி அல்ல’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ‘எப்போதும் இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்’ என்று கூறியிருந்தார். இந்த கருத்துகள் குறித்து சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜ மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி “நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். பாஜ ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பைப் பார்க்கிறது. அவற்றை வணங்குகிறது’’என பேசினார்.

இதை தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப் ‘இந்தி இனி நமது தேசிய மொழி அல்ல என்று கூறி, கலகத்தையோ விவாதத்தையோ உருவாக்க முயற்சி செய்யவில்லை. எந்தவித நோக்கமுமின்றி தன்னிச்சையாக நிகழ்ந்தது அது. எனது கருத்தை நான் முன்வைத்தேன். பிரதமரின் வார்த்தைகளில் இது வெளிப்பட்டுள்ளது. நான் கன்னட மொழிக்காக மட்டும் பேசவில்லை. எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என்று மோடி பேசியுள்ள கருத்தைத்தான் நானும் அன்றைக்கு முன்வைத்தேன். பிரதமர் தெரிவித்துள்ள கருத்தால், அனைவரின் தாய்மொழியும் மதிக்கப்பட்டுள்ளது”என்று கூறியுள்ளார்.

Related Stories: