பலாத்கார வழக்கில் சரணடைய மறுப்பு நடிகர் விஜய் பாபுவின் சொத்துக்களை முடக்க போலீஸ் நடவடிக்கை

திருவனந்தபுரம்: மலையாள புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நடிகர் விஜய் பாபுவின் சொத்துக்களை முடக்க கொச்சி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி புதுமுக நடிகையை பல ஓட்டல்கள் உள்பட பல இடங்களுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்ததாக மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது கொச்சி போலீசார் கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவரை இதுவரை போலீசாரால் கைது செய்யமுடியவில்லை. துபாயில் தலைமறைவாக இருந்த விஜய் பாபுவை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய கொச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.தொடர்ந்து கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் துபாயில் இருந்து ஜார்ஜியா நாட்டுக்கு தப்பிச் சென்றார். இதற்கிடையே விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜார்ஜியா நாட்டிலிருந்து அவரால் வேறு எங்கும் செல்ல முடியாது. ஜார்ஜியாவில் இந்திய தூதரகம் இல்லாததால் அண்டை நாடான அர்மீனியாவிலுள்ள இந்திய தூதரகத்திற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம்  விஜய் பாபுவின் பாஸ்போர்ட் ரத்து செய்தது குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விஜய் பாபு மீது கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க கொச்சி போலீசார் தீர்மானித்துள்ளனர். வரும் 24ம் தேதிக்குள் போலீஸ் முன் ஆஜராகாவிட்டால் அவரது சொத்துக்களை முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Stories: