சன்ரைசர்ஸ் நிதான ஆட்டம் பஞ்சாப் கிங்சுக்கு 158 ரன் இலக்கு

மும்பை: பஞ்சாப் கிங்சுக்கு எதிரான ஐபிஎல் டி20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் புவனேஸ்வர் குமார் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரியம் கார்க், அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பிரியம் கார்க் (4) வந்த வேகத்தில் ரபாடா பந்தில் ஆட்மிழந்தார். ஆனாலும், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஜோடி நிதானமாக விளையாடியது. இவர்கள் 2வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்த நிலையில், ஹர்பிரீத் பிரார் அபாரமாக பந்துவீசி சன்ரைசர்சை தடுமாறச் செய்தார். திரிபாதி (20 ரன், 18 பந்து), அபிஷேக் சர்மா (43 ரன், 32 பந்து), மார்க்ரம் (21 ரன், 17 பந்து) ஆகிய 3 பேரின் விக்கெட்டையும் பிரார் கைப்பற்றினார். அதிரடி வீரர் பூரண் 5 ரன்னில் எல்லிஸ் பந்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இதனால், சன்ரைசர்ஸ் அணி 96 ரன்னில் 5 விக்கெட் இழந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர், ரோமரியோ ஷெப்பர்ட் கைகொடுத்தனர். இந்த ஜோடி 58 ரன் சேர்த்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் சுந்தர் (25 ரன், 19 பந்து), சுஜித் (0) விக்கெட்டுக்களை எல்லிஸ் அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் 1 ரன்னில் ரன் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. ஷெப்பர்ட் 26 ரன்னுடன் (15 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணியில் பிரார், எல்லிஸ் தலா 3 விக்கெட்டும், ரபாடா 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். அடுத்ததாக, 20 ஓவரில் 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் பயர்ஸ்டோ, தவான் ஆட்டத்தை தொடங்கினர்.

Related Stories: