ஆசிரியர் பணி நியமன முறைகேடு 5 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு: மே. வங்கத்தில் மம்தாவுக்கு நெருக்கடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக 5 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேற்கு வங்க கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் சந்திர அதிகாரி. இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அரசு உதவி பெறும் பள்ளியில் தனது மகள் அங்கிதாவை முறைகேடாக ஆசிரியராக நியமித்தார். இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி கங்கோபாத்யாய், அங்கிதாவை பணியில் இருந்து நீக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் (எஸ்எஸ்சி) நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் கடந்த மாதம் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இதில் தொடர்புடைய கல்வி அமைச்சர் பரேஷ் சந்திராவிடம் சிபிஐ தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தியது. இந்நிலையில், மாநில ஆலோசனை குழுவின் முன்னாள் தலைவர் சாந்தி பிரசாத் சின்கா, ஆசிரியர் தேர்வு ஆணைய முன்னாள் தலைவர் சவுமித்ரா சர்க்கார், முன்னாள் செயலாளர் அசோக்குமார் சகா உள்பட 5 பேர் மீது சிபிஐ நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது.  வங்கி கணக்குகள், சொத்துகள் மற்றும் வருமான வரி ரிட்டர்ன் விவரங்களை சமர்ப்பிக்கும்படி இந்த 5 பேருக்கும் சிபிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் தற்போது தொழில்துறை அமைச்சராக உள்ள பார்த்தா  சட்டர்ஜியிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது. அடுத்தடுத்து அமைச்சர்கள் சிக்குவதால், முதல்வர் மம்தாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related Stories: