இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் 21ம் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா? அமைச்சரவையில் இன்று பரிசீலனை

கொழும்பு: இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் 21வது சட்டத் திருத்தத்தை அமைச்சரவை ஒப்புதலுக்கு இன்று அனுப்பப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் சுற்றுலா துறை முடங்கி, அன்னிய செலவாணி வெகுவாக சரிந்ததால், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கை தள்ளாடி கொண்டு இருக்கிறது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். எரிபொருள் வாங்க கூட அரசிடம் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தவறான பொருளாதார கொள்கை மூலம் நாட்டை இந்த நிலைமைக்கு எடுத்து சென்ற பிரதமராக இருந்த மகிந்த மற்றும் அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலகக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கடந்த 9ம் தேதி பிரதமர் பதவியை மகிந்த ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் போராடி வரும் மக்கள் மீது கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தினார். இதனால், ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

புதிய பிரதமராக பதவியேற்று உள்ள ரணில், பொருளாதாரத்தை மீட்க முயன்று வருகிறார். ஆனால், இலங்கை வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதால், மேற்கொண்டு கடனை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அண்டை நாடான இந்தியாவிடம் கையேந்தி நிற்கிறது. மேலும், சர்வதேச நிதியத்திடம் கூடுதல் நிதியை பெற முயற்சித்து வருகிறது. பணவீக்கம் 40 சதவீதத்தை நோக்கிச் செல்கிறது. இந்த சூழ்நிலையில், இலங்கை திவாலாகி வருவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.  

இலங்கை இந்த நிலைமைக்கு செல்ல உச்சப்பட்ச அதிகாரத்தை அதிபர் கையில் கொடுத்ததுதான் என்று எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் அப்போதைய பிரதமர் ரணிலால் கொண்டு வரப்பட்ட அரசியலைமைப்பின் 19வது சட்டத் திருத்தத்தை மீண்டும் அமல்படுத்தும் வகையில், தற்போது அதிபருக்கே அனைத்து அதிகாரங்கள் கொண்டு உள்ள 20ஏ சட்டத் திருத்தத்தை நீக்கிவிட்டு, 21வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலுத்து வருகிறது. இது தொடர்பாக, அரசு தலைமை வழக்கறிஞர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த 16ம் தேதி ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 21வது சட்ட திருத்தம் செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

இது குறித்து, சட்டத்துறை அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சே கூறுகையில், ‘அதிபரின் அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்துக்கே கூடுதம் அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று அனுப்பப்படும். இந்த சட்டத் திருத்ததில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். மத்திய வங்கியின் ஆளுநரை நாடாளுமன்றத்திற்கு கீழ் நியமிப்பதற்கும் இந்த திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்.  

* 2024 வரை எந்த தேர்தலும் கிடையாது

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பேப்பர், மை போன்ற பொருட்கள் கிடைக்காததால், பள்ளிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், இலங்கையில் பொருளாதாரத்தை சீர் செய்யும் வரையில் 2024ம் ஆண்டு வரையில் எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories: