அதிமுக மாவட்ட மாணவரணி தலைவருக்கு சரமாரி வெட்டு: போதை ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

கூடுவாஞ்சேரி:  ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் வீட்டு வாசலில் இருந்து காரை எடுக்க முயன்ற, அதிமுக மாவட்ட மாணவரணி துணை தலைவருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இதில், போதையில் வந்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி, கோகுலம் காலனி விரிவு பகுதி, ராஜி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவரது மகன் மணிகண்டன் (24). அதிமுக மாவட்ட மாணவரணி துணை தலைவராக உள்ளார். மேலும், இவர் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

இந்நிலையில், மணிகண்டன் தனது காரை வீட்டில் இருந்து நேற்று மாலை எடுத்து உள்ளார். அப்போது, இவரை நோட்டமிட்டபடி 2 பைக்குகளில் போதையில் வந்த மர்ம ஆசாமிகள் மணிகண்டனிடம் தகராறு செய்து கையில் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதில், அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு ஓடி வந்தனர். இதனை கண்டதும் பைக்குகளில் வந்த மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இது குறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து போதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: