6 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி கிராமங்களில் விவசாயிகள் பைக் பிரசாரம்

பள்ளிப்பட்டு: தச்சூர் - சித்தூர் 6 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளிப்பட்டு பகுதியில் கிராமங்களில்  விவசாயிகள் பைக் பிரசாரத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் தச்சூரிலிருந்து பள்ளிப்பட்டு வழியாக சித்தூர் வரை சுமார் 120 கி.மீ தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க ஏதுவாக விவசாயிகளிடம் நிலம்  கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பள்ளிப்பட்டு பகுதி விவசாயிகள் சாலை அமைக்க நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவசாயிகள் பைக் பிரசாரம் நேற்று நடந்தது. இதில் வட்ட செயலாளர் ரஜினி தலைமை வகித்தார். பிரசாரத்தை மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் சுந்தர்ராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு பெருமாள் வாழ்த்துரை வழங்கினார்.  சமந்தவாடா கிராமத்திலிருந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களில்  பைக் பிரசாரத்தை பள்ளிப்பட்டில் நிறைவு செய்தனர்.  அப்போது, ‘முப்போகம் விவசாயம் செய்து வரும் நிலங்களில் சாலை அமைக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், வட்ட குழு உறுப்பினர்கள் கே.ஜி.கணேசன், சிவபிரசாத், ஜெயச்சந்திரன் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: