×

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது.! டெல்டா பாசனத்திற்கு 24ம் தேதி முதல்வர் தண்ணீர் திறக்கிறார்

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை நீர்மட்டம் 116.67 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (24ம் தேதி) தண்ணீர் திறந்து வைக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு நேற்று காலை 25,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 16,000 கனஅடியாக சரிந்துள்ளது.

இருப்பினும், ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயினருவியில் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் இயக்குவதற்கும் விதிக்கப்பட்ட தடை, இன்று 5வது நாளாக நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 25,161 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 115.35 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 116.67 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த அணை பாசனம் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் உட் பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை, டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர் களுக்கு 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் குறிப் பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்படும். கடந்தாண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12ல் காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். 28.1.22 வரை 129 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது. அன்றைய தினம் அணை மூடப்பட்டது.

இந்நிலையில், நடப்பாண்டு நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதாலும், மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் வழக்கமான தேதிக்கு முன்பாக, இம்மாதம் (மே) 24ம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்ப தற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வரும் 24ம் தேதி காலை, மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படவுள்ளதால், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர், கடலூரில் 30,800 ஏக்கர் என 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள். இதனால், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Mattur Dam ,delta , Mettur Dam water level close to 117 feet.! The Chief Minister opens the water on the 24th for delta irrigation
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...