×

கோயில் குளத்தை தூர்வாரிய போது சோழர் காலத்து 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சையில் கோயில் குளத்தை தூர்வாரிய போது 7 சுடுமண் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சை கரந்தையில் 1400 ஆண்டுகள் பழமையான கருணாசாமி கோயில் உள்ளது. இதன் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் தீர்த்தக்குளம் உள்ளது. சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால சோழனுக்கு கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்தது. அவர், அந்த நோயை தீர்க்க பல மருத்துவ முறையை கையாண்டும் பலனில்லாமல் போனது. ஒருநாள் அவரது கனவில் தோன்றிய கடவுள், கருணாசாமி கோயில் குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் தோல் நோய் நீங்கும் என தெரிவித்தாராம்.

அதன் பேரில் கரிகால சோழன் இந்த குளத்தில் நீராடியதில் நோய் நீங்கியதாக கூறப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த இந்த குளம் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் இந்த குளத்தை மீட்க வேண்டும் என சிவனடியார்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று அந்த குளத்தை தோண்டும் போது 3 அடி விட்ட சுடுமண் உறை கிணறு ஒன்று கண்டறியப்பட்டது. அதிலிருந்து தண்ணீர் ஊறி கொண்டிருந்தது. இதனை பார்த்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

மேலும் குளத்தை தோண்டினால் பல்வேறு உறைக்கிணறு தென்படும் என நினைத்தனர். அதன்படி குளத்தில் தொடர்ந்து தூர்வாரும் போது அடுத்தடுத்து 6 சுடுமண் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து குளத்தை முழுமையாக தூர்வாரினால் மேலும் பல உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்படும் என்று சிவனடியார்கள் தெரிவித்தனர். இதனால் குளத்தை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. உறைக் கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அறிந்த அந்த பகுதி மக்கள் தீர்த்த குளத்திற்கு வந்து உறை கிணறுகளை பார்வையிட்டு செல்கின்றனர்.

Tags : Cholar , Discovery of 7 bore wells from the Chola period during the excavation of the temple pond
× RELATED சூடிக் கொடுத்த சோழன்