×

பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து: குஜராத் தேர்தல் தோல்வி அச்சத்தால் பாஜக பல்டி

காந்திநகர்: குஜராத் தேர்தலுக்கு மத்தியில், பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து செய்யப்படுதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்தர் படேல் தலைமையிலான பாஜக அரசு நடக்கிறது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் ஆகிய பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அம்மாநில அரசு தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இத்திட்டத்திற்கு பழங்குடியின சமூக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தை அமல்படுத்தினால் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை மாநில அரசு திரும்பப் பெறவேண்டும் என்று முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், பழங்குடியினரின் வாக்கு வங்கி பறிபோய் விடுமோ? என்ற அச்சத்தில்,  தபி - நர்மதா இணைப்பு திட்டத்தை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் பூபேந்தர் படேல் கூறுகையில், ‘குஜராத் மாநில அரசு, தபி - நர்மதா இணைப்பு திட்டத்தை ரத்து செய்துள்ளது. இந்த  திட்டம் ஒன்றிய அரசுக்கு சொந்தமானது. குஜராத் அரசு பழங்குடியினருக்கு ஆதரவாக இருக்கும். இந்த திட்டம்  குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு தவறான கருத்துக்கள் பரப்பி வருகின்றன’ என்றார்.

குஜராத்தின் மொத்த 180 இடங்களில் குறைந்தபட்சம் 27 இடங்களில், பழங்குடி சமூகம் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு பழங்குடியினரின் வாக்குகள் அதிகம் கிடைத்தன. அதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அவர்களில் சிலர் பாஜகவுக்கு தாவி அமைச்சரானதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், இந்த முறை தேர்தலில் 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை பாஜக நிர்ணயித்துள்ளது. அதனால் பழங்குடி சமூக மக்களின் வாக்குகளை கவர, அவர்களுக்கு எதிரான திட்டங்களை அறிவித்துவிட்டு தற்போது அதனை மாநில அரசு வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Bajaka Baldi ,Gujarat , Narmada river connection project canceled due to continuous protests by tribal people: BJP retaliates for fear of Gujarat election defeat
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...