காவேரிப்பாக்கம் அருகே இன்று கொலை செய்து புதைக்கப்பட்ட சென்னை முதியவர் சடலம் தோண்டி எடுப்பு

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே மகனால் கொலை செய்யப்பட்டு பேரலில் அடைத்து புதைக்கப்பட்ட முதியவரின் சடலம் இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை வளசரவாக்கம் ஆற்காடு ரோட்டை சேர்ந்தவர் குமரேசன்(80). தனக்கு சொந்தமான காம்ப்ளக்சில் மகள் காஞ்சனாவுடன் வசித்து வந்தார். இவரது மகன் குணசேகரன், தனது மனைவி வசந்தி மற்றும் மகன்களுடன் அதே காம்ப்ளக்சின் முதல்தளத்தில் வசித்து வருகிறார். வடபழனி, வளசரவாக்கம் பகுதிகளில் குமரேசனுக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ்கள் மூலம் வரும் மாத வாடகை காரணமாக தந்தை, மகன் இடையே தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 19ம்தேதி வெளியே சென்றிருந்த காஞ்சனா வீடு திரும்பியபோது, வீடு முழுவதும் ரத்தக்கறை இருந்தது. தந்தை குமரேசனையும் காணவில்லை. குணசேகரன் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காஞ்சனா, வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம்குரூஸ் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினார். அதில் குமரேசனை அவரது மகன் குணசேகரன் கொன்று உடலை பேரலில் அடைத்து ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தஞ்சை நகரில் புதைத்தது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த இடத்தின் உரிமையாளரான ரியல் எஸ்டேட் புரோக்கர் வெங்கடேசன்(66), பேரல் புதைக்க பள்ளம் தோண்டிய பெருமாள்(60) ஆகியோரிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். அதில் குடோன் அமைப்பதாக கூறி காலி வீட்டுமனையை குணசேகரன் வாடகைக்கு எடுத்து, சாமியார் செய்வினை நீக்கி அதனை பேரலில் அடைத்திருப்பதாக கூறி வீட்டுமனையில் பேரலை புதைத்தது தெரியவந்தது. பேரல் புதைக்க பள்ளம் தோண்டுவதற்கு ₹700 கூலி கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை தோண்டியெடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் சென்னை வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம்குரூஸ், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், நெமிலி தாசில்தார் ரவி, விஏஓ தேவி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள் மகேந்திரன், தீபா, கொலையான குமரசேனின் உறவினர்கள் தர், ஆனந்தன் மற்றும் பேரலை ஆட்டோவில் ஏற்றி வந்த பூந்தமல்லி அடுத்த திருமழிசையை சேர்ந்த திருமூர்த்தி(58), இடத்தின் உரிமையாளர் வெங்கடேசன், பள்ளம் தோண்டிய கூலித்தொழிலாளி பெருமாள் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை சுமார் 9 மணியளவில் சடலத்தை தோண்டினர்.

சுமார் 10.30 மணியளவில் 3அடி உயரம், 3 அடி அகலமுள்ள பேரலை வௌியே எடுத்தனர். உள்ளே தலையணை, பெட்ஷீட் வைத்து சடலத்தை உள்ளே அழுத்தி புதைக்கப்பட்டது தெரியவந்தது. சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. பின்னர் வெளியே எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். தடயவியல் நிபுணர்வுகள் சொக்கநாதன் மற்றும் ஓய்வு பெற்ற நிபுணர் பாரி ஆகியோர் தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள குணசேகரனை தொடர்ந்து தேடி வருகின்றனர். காவேரிப்பாக்கம் பகுதியில் முதியவரின் சடலம் புதைக்கப்பட்டு சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: