வடக்கிபாளையம் பிரிவு மேம்பால பக்கவாட்டு சுவரில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோவை ரோட்டிலிருந்து பிரிந்து கிராம புறங்களுக்கு செல்லும் முக்கிய சாலையான வடக்கிபாளையம் ரோடு பிரிவு ஆ.சங்கம்பாளையத்தில் சுமார் 6 ஆண்டுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால், இந்த வழியாக போக்குவரத்து பாதிப்பின்றி வாகன ஓட்டிகள் விரைந்து சென்று வருகின்றனர்.

இரவு நேரத்தில் அடிக்கடி ஏற்பட்ட விபத்தால், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில், ரிப்லைக்டர் மற்றும் விபத்து தடுப்பு குறி உள்ளிட்டவை ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டது. ஆனால், ரயில் செல்லும் தண்டவாளத்தின் மேல் பகுதியில் மட்டும் உயரமான தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதம் சுமார் 400 மீட்டர் தொலைவில், மேம்பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு சுவரில் உயரமான தடுப்புகள் இல்லாமல் இருப்பது, வாகன ஒட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பைக்கில் வேகமாக வந்த நபர், தடுப்புச்சுவரையும் தாண்டி கீழே விழுந்து இறந்த சம்பவம் நடந்துள்ளது. கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்துக்களால், தற்போது அங்கு பக்கவாட்டு சுவரில் இரும்பு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல், வாகன போக்குவரத்து அதிகமுள்ள, வடக்கிபாளையம் பிரிவு ரயில்வே மேம்பால பக்கவாட்டு சுவரில் உயரமான தடுப்பு ஏற்படுத்தி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: