அந்தரத்தில் மிதந்தபடியே ஏரியின் எழிலை ரசிக்கலாம்: கொடைக்கானலில் ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் குளுகுளு சீசன் களை கட்டியுள்ளதால், வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களும் கோடை சீசன் காலமாகும். தற்போது மிதமான வெயில், இதமான குளிர் சூழல் நிலவி வருகிறது. வரும் 24ம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி துவங்க உள்ளது. இதற்காக பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் செட்டியார் பூங்காவில் பல லட்சம் மலர்கள் பூத்து குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

இதனால் கொடைக்கானலை நோக்கி அதிகளவில் வெளிமாவட்ட, வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும், கோடை விடுமுறை மற்றும் நேற்று வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.

மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு காணப்பட்டனர்.  ஏரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்: கொடைக்கானல் மன்னவனூர் ஏரிப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட வன அலுவலர் டாக்டர் திலீப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.  முதற்கட்டமாக ஜிப் லைன் என்ற சாகச சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளார். மன்னவனூர் ஏரியை ‘ஜிப் லைன்’ மூலம் அந்தரத்தில் மிதந்தபடி சென்று ரசிக்க முடியும். இதன்மூலம் இரும்பு கயிற்றில் தொங்கியபடி ஒரு கரையில் இருந்து மறுமுனைக்கு செல்லலாம். நபர் ஒன்றுக்கு ரூ.500 கட்டணமாக வனத்துறையினர் நிர்ணயித்துள்ளனர்.

சுமார் 65 கிலோ எடை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த லைனில் சென்று ஏரியை ரசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. 650 மீட்டர் தொலைவு இந்த இரும்பு கயிற்றில் செல்லும் தூரம். நேற்று முதல் இந்த சாகச சுற்றுலா அறிமுகமாகி உள்ளது. ஏற்பாடுகளை மன்னவனூர் ரேஞ்சர் நாதன் மற்றும் வனத்துறையினர் செய்துள்ளனர்.

Related Stories: