அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரிப்பு குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தென்காசி: குற்றாலத்தில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால்  வரிசை இல்லாமல் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் இந்தாண்டு வழக்கத்தைவிட 15 நாட்கள் முன்னதாக மே மாதத்தின் 2வது வாரத்திலேயே சீசன் தொடங்கியது. அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று பகலில் வெயிலும், சாரலும் மாறி மாறி காணப்பட்டது. பெரும்பாலான நேரம் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் அனைத்து அருவிகளிலும் வரிசை இல்லாமல் குளித்து மகிழ்ந்தனர்.

இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் குறைவின்றி தண்ணீர்  கொட்டுவதால் நேற்று குவிந்த சுற்றுலா பயணிகள்,  ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். அருவிக்கு செல்லும் அனைத்து  வாகனங்களையும் பாபநாசம் சோதனை சாவடியில் வனத்துறையினர் சோதனைக்கு பிறகு  அனுமதி அளித்தனர். சுற்றுலா பயணிகள் கொண்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர். ஆன்மிக சுற்றுலா வரும் பக்தர்கள்,  பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி உலகம்மை சமேத பாபநாச சுவாமி  கோயிலில்  சுவாமி -அம்பாளை தரிசித்து சென்றனர்.

Related Stories: