திருவனந்தபுரம்- ஊட்டி இடையே அரசு பேருந்து இயக்கம்: பொதுமக்கள் வரவேற்பு

கூடலூர்: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு இரண்டு தொலைதூர இரவு சொகுசு பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்திலிருந்து மாலை 6:30 மற்றும் இரவு 8 மணிக்கு இரண்டு பேருந்துகள் கோட்டயம் மற்றும்  ஆலப்புழா, எர்ணாகுளம் வழியாக காலை 5 மற்றும் 6 மணிக்கு  கூடலூர் வந்தடைந்து பின் ஊட்டிக்கு செல்கிறது. இதே போல் இரவு 7 மணி மற்றும் 8 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு கூடலூர் வழியாக அதிகாலையில் திருவனந்தபுரம் சென்றடைகிறது.

கேரளாவில் இருந்து அதிக அளவில்  ஊட்டிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு உள்ள இந்தபேருந்துகள் கூடலூரில் வசிக்கும் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் உபயோகம் உள்ளதாக அமைந்துள்ளது.

புதிய பேருந்துகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு கூடலூர் புதிய பேருந்து நிலையம்  அருகே நடைபெற்றது. பஸ் டிரைவர்,கண்டக்டர்களுக்கு கூடலூர் பயணிகள் நல சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தியும்,பரிசுகளை அளித்தும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி வாசு, கூடலூர் நகராட்சி கவுன்சிலர்கள் லீலாவாசு,வர்கீஸ், கூடலூர் பயணிகள் நல சங்க செயலாளர் வழக்குரைஞர் கிரிஷ்குமார்,விஜே டிராவல்ஸ் உரிமையாளர் ஜேம்ஸ் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: