லோடு வாகனங்களால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் திக்...திக்...

கம்பம்: கம்பத்தில் எச்சரிக்கை இல்லாமல் செல்லும் லோடு வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் கலக்கத்துடன் செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகராட்சி வளர்ந்து வரும் நகராக உள்ளது. கம்பத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்களும், கேரளாவைச் சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க, கம்பத்திற்கு வந்து செல்கின்றனர். நகரில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளன. காங்கிரீட்டுக்கு தேவையான இரும்பு கம்பிகளை வாங்கிச் செல்லும் சரக்கு வாகனங்கள் விபத்து ஏற்படுத்தும் வகையில் செல்கின்றன.

திடீரென பிரேக் பிடித்தால் பின்புறம் வருபவர்கள் கம்பிகளில் மோதி உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தகுந்து முன்னெச்சரிக்கையுடன் செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கட்டுமானத்திற்கு தேவையான கம்பிகளை ஏற்றிச் செல்ல பெரிய வாகனங்களை பயன்படுத்தினால், வாடகை அதிகமாகும் என மினி சரக்கு வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஏற்றிச் செல்லும் கம்பிகள் சாலையில் தவறி விழவும், பின்னால் வரும் வாகனங்களில் மோதவும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: