கோடை மழை எதிரொலி சோலையார் அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்வு

வால்பாறை: வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால்  தேயிலைத் தோட்டங்கள், வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பியது. மழையின் காரணமாக சோலையார் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள பி.ஏ.பி பாசனத் திட்ட அணைகள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நீர்மட்டம் கணிசமாக குறைந்து காணப்பட்டது. மே மாதம் 1ம் தேதி 165 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 25.5 அடியாகவும், 15ம் தேதி 27 அடியாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 32.2 அடியாக இருந்த சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து, நேற்று காலை நிலவரப்படி 42 அடியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,090 கன அடியாக உள்ளது. இதனால் பரம்பிக்குளம் பாசன திட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  வால்பாறை பகுதியில் அதிகபட்சமாக வால்பாறையில் 78 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சின்னக்கல்லாறு 74, கீழ்நீராறு 70, சோலையார் அணையில் 64 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Related Stories: