மாநகரில் தெருநாய் கணக்கெடுப்பு பணி துவங்கியது

கோவை: கோவை மாநகர சாலைகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வைகயில் சுற்றிவரும் தெருநாய்களின் எண்ணிக்கையை, தகுந்த செயலி மூலம் கணக்கெடுக்கும் பணி துவக்கவிழா மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதை, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா துவக்கிவைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘’கோவை மாநகராட்சியுடன் இணைந்து, வஜ்ரா சமூக நல அறக்கட்டளை சார்பில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு சுமார் 7 முதல் 8 நாட்கள் நடைபெறும். இப்பணியில், 20 முதல் 25 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாகனம் மூலம் பயணித்து, இக்கணக்கெடுப்பு பணியை மேற்கொள்கின்றனர்’’ என்றார்.

தன்னார்வலர் ஜெசிகா ஜெயபாலன் கூறுகையில், ‘’இந்த முயற்சியின் மூலம் கோவை மாநகரில் உள்ள தெருநாய்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதே எங்களது நோக்கம். இந்த திட்டத்தை விரிவுபடுத்தினால் நகரின் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களை தனியாக பராமரிக்க முடியும் என நம்புகிறோம். இத்திட்டம், தற்போது கிழக்கு மண்டல பகுதிகளில் பரீட்சார்த்த அடிப்படையில் துவக்கப்பட்டுள்ளது. இனி, அனைத்து மண்டலங்களிலும் இக்கணக்கெடுப்பு நடத்தப்படும்.’’ என்றார். நிகழ்ச்சியில், துணை மேயர் வெற்றிச்செல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், உதவி கமிஷனர் மாரிச்செல்வி, நகர்நல அலுவலர் டாக்டர் சதீஷ்குமார், மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குனர் செந்தில்நாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: