மும்பை இந்தியன்சிடம் தோற்று வாய்ப்பை வீணடித்தது டெல்லி: பிளே ஆப் சுற்றில் ஆர்சிபி

மும்பை: மும்பை அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மோசமான ஆட்டம் காரணமாக, தோல்வியைத் தழுவிய டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை வீணடித்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசியது. பிரித்வி, வார்னர் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். வார்னர் 5 ரன் எடுத்து வெளியேற, மார்ஷ் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார். பிரித்வி 24 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), சர்பராஸ் 10 ரன்னில் பெவிலியன் திரும்ப, டெல்லி 8.4 ஓவரில் 50 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கேப்டன் பன்ட் - பாவெல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. பன்ட் 39 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), பாவெல் 43 ரன் (34 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். ஷர்துல் 4 ரன்னில் அவுட்டானார். டெல்லி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. அக்சர் 19 ரன் (10 பந்து, 2 சிக்சர்), குல்தீப் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை பந்துவீச்சில் பும்ரா 3, ரமன்தீப் 2, சாம்ஸ், மார்கண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. அதிகபட்சமாக கிஷான் 48 ரன் (35 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். இறுதியில் ராமன்தீப்சிங் 13 ரன், சாம்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் ஷர்துல், ஆன்ரிச் ஆகியோர் தலா விக்கெட், 2 விக்கெட் கைப்பற்றினர். புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த குஜராத், ராஜஸ்தான், லக்னோ, ஆர்சிபி அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாட உள்ளன. டெல்லி அணி வாய்ப்பை வீணடித்து 5வது இடத்துடன் திருப்தி அடைந்தது.

Related Stories: