சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை 2.0 திட்டத்துக்கு முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால், சாலைகள், பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையை அழகுபடுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கார சென்னை என்பது தலைநகர் சென்னையை அழகுபடுத்தும் திட்டமாகும். 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டபோது, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையை அழகுபடுத்த சிங்கார சென்னை திட்டத்தை கொண்டு வந்தார். இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், புதுப்பொலிவுடன் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி இந்த திட்டம் புதுப்பொலிவுடன் உரிய நிதிகள் ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் புதிய சாலைகள் போடுவது, பாலங்கள் கட்டுவது, சுவரொட்டிகளை நீக்கி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோன்று, புதிய பூங்காக்கள் அமைப்பது, கடலோர பூங்காக்கள் அமைப்பது, சென்னை கடற்கரைகளை சுற்றுலா தலமாக மாற்றும் ப்ராஜக்ட் ப்ளூ என்ற திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 

முதற்கட்டமாக சென்னையை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு கொசுக்களை ஒழிக்க டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளும் நடக்கின்றன. அதேபோன்று, வடகிழக்கு பருவமழையின் போது சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் நீர்நிலைகள், மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும் என கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில், கடந்த ஆண்டு பெய்த கன மழையால், சென்னை மாநகர் முழுதும் வெள்ளத்தில் தத்தளித்தது. முக்கிய வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதாலும், பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததாலும், மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் மெல்ல வடிந்தது. ஒவ்வொரு பருவமழையின் போதும் சென்னையில் வெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தாலும், கடந்த ஆண்டு பெய்த மழையால், முக்கிய சாலைகளும் தண்ணீரில் மூழ்கின. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. இதையடுத்து, மாநகரின் அனைத்து மண்டலங்களிலும் வடிகால்களை சீரமைக்கவும், பல இடங்களில் புதிய வடிகால்கள் அமைக்கவும், மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ரூ.184 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அனைத்து மண்டலங்களிலும் 40.80 கி.மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக ரூ.70 கோடி மதிப்பீட்டில் 20.03 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையை சர்வதேச தரத்தில் அழகுபடுத்தும் திட்டமும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து சாலைகள் புதுப்பிப்பு, செயற்கை நீரூற்று அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூங்காங்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இன்னும் பல திட்டங்களுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. அவை முடிவடைந்ததும் பல கட்டங்களாக புதிய பணிகள் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கண்கவர் ஓவியங்கள்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ நிர்வாகம் இணைந்து ஓவியம் வரையும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள், பூங்காக்கள், அரசு பொதுக் கட்டிடங்கள், மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள தூண்கள் என வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பெண்கள் விவசாய வேலை செய்வது போன்றும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிப்பது போன்றும், பெண்கள் வாகனம் ஓட்டுவது, கோலங்கள் போடுவது போன்றும் கண்ணை கவரும் ஓவியங்கள் மிக நேர்த்தியாக வரையப்பட்டு உள்ளன. மேலும் விலங்குகள், காடுகள், பறவைகள், பூக்கள், நாட்டின் புராதன சின்னங்கள் ஆகியவையும் வரையப்பட்டு வருகின்றன.

Related Stories: