ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு

சென்னை: ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக காங்கிரஸ் சார்பில் சைதாப்பேட்டையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜிவ் காந்தியின் உருவப் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்பி, டாக்டர் செல்லக்குமார் எம்பி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய் வசந்த் எம்பி, மகிளா காங்கிரஸ் தலைவி சுதா, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், ரஞ்சன் குமார், நாஞ்சில் பிரசாத் மற்றும் நிர்வாகிகள் மயிலை தரணி, சுமதி அன்பரசு உட்பட ஏராளமானோர் மரியாதை செய்தனர்.

பின்னர், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் பல்வேறு இந்திய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு கண்டவர். விஞ்ஞான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தியவர். இந்தியாவை 21ம் நூற்றாண்டிற்கு கொண்டு சென்றவர். இந்தியாவை மருவுருவாக்கம் செய்தவரை மறக்க முடியாது. சீமான் வேடிக்கையாக பேசுவதில் வல்லவர். ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவிற்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. அவர் சமூக கருத்தை சொல்வதற்கு தகுதியில்லாதவர். சீமான், பிரபாகரனுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்ததுகூட கிடையாது. பேரறிவாளன் விடுதலையை காங்கிரசால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சீமான் பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நாங்களும்  அது போன்று பேச நேரிடும். நாங்கள் மதச்சார்பின்மை என்ற கொள்கையின் கீழ் கூட்டணி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: