5529 பதவிகளுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தமிழகம் முழுவதும் 9.94 லட்சம் பேர் எழுதினர்: ஒரு பதவிக்கு 180 பேர் போட்டி; தேர்வு மையங்களில் அதிரடி சோதனை

சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 5529 பணியிடங்களுக்கு நேற்று முதல்நிலை தேர்வு நடந்தது. இத்தேர்வை 9.94 லட்சம் பேர் எழுதினர். இதனால், ஒரு பதவிக்கு 180 பேர் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. தேர்வு நடந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி (நேர்முக தேர்வு பதவி) 116 இடங்கள், குரூப் 2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 23ம் தேதி அறிவித்தது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23ம் தேதி வரை ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது இளங்கலை படிப்பு படித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வுக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இதனால் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 ஆனது. அதே நேரத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 தேர்வில் இவ்வளவு பேர் விண்ணப்பித்தது இல்லை என்ற புதிய சாதனையையும் படைத்தது.

விண்ணப்பித்தவர்களில் பெண்கள் 6,81,880 பேர், ஆண்கள் 4,96,247 பேர், மூன்றாம் பாலினத்தவர் 48 பேர், 14531 பேர் மாற்றுத்திறனாளிகள். இந்நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 4012 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வை கண்காணிக்க ஒரு மையத்திற்கு ஒருவர் வீதம் 4012 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதை தவிர்த்து 58,900 கண்காணிப்பாளர்கள், சோதனை நடத்தும் பணியில் 6400 பேர், 993 நடமாடும் குழுக்கள், 323 பறக்கும் படையினர் என தேர்வு பணி, கண்காணிப்பு பணி என சுமார் 71 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சென்னையை பொறுத்தவரை மாநில கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் பிஎஸ் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி என்.கே.டி. பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் ராயப்பேட்டை, அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, பெரம்பூர், வடபழனி, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த 480 தேர்வு கூடங்களில் தேர்வு நடைபெற்றது.

சென்னையில் மட்டும் 1,15,843 பேர் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது. எழுத்து தேர்வில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. தேர்வு நடந்த அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சாதாரணமாக ஒரு பதவிக்கு குறைந்தபட்சம் 50 பேர் வரைதான் போட்டியிடுவார்கள். ஆனால், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் ஒரு பதவிக்கு 180 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கட் ஆப் மதிப்பெண்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

* 1.83 லட்சம் பேர் ஆப்சென்ட்

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 11 லட்சத்து 78,163 பேர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துள்ளனர். மொத்தத்தில் தேர்வை 84.44 சதவீதம் பேர் எழுதியுள்ளனர். அதாவது, 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்துள்ளனர். 15.56 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அதாவது 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுத வரவில்லை. வழக்கமாக 80 சதவீதம் பேர் வரை தான் தேர்வு எழுதுவது வழக்கம். ஆனால் இந்த முறை 84.44 சதவீதம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

* தேர்வு எளிதாக இருந்தது: மாணவர்கள் கருத்து

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறியதாவது: தேர்வில் வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. குறிப்பாக திறனறிவு தேர்வு வினாக்கள் எளிதாக இருந்தது. நாட்டு நடப்புகள் தொடர்பாக கேள்விகள் இடம் பெற்றிருந்தன. கணிதம் தொடர்பான கேள்விகள் எளிதாக வகையில் இருந்தது. பொது அறிவியல் கொஞ்சம் கடினமாக இருந்தது. பெரும்பாலானவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், கட் ஆப் மதிப்பெண்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

* ஜூன் மாதம் ரிசல்ட்

சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் இருந்து வெப் கேமரா மூலம் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடைபெறுவதை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது: குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மெயின் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. மெயின் தேர்வுக்கு ஒரு பணிக்கு 10 பேர் என்ற அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தற்போதைய பணியிடங்கள் அடிப்படையில் 55 ஆயிரம் பேர் வரை மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஒரே மார்க்கில் 100 பேர் வருகிறார்கள் என்றால் 100 பேரையும் மெயின் தேர்வு எழுத அனுமதிப்போம். இதனால் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 1 பணியிடத்துக்கு 12 பேர் என்ற அடிப்படையில் மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: