×

மூன்று மாதம்... 76 குழந்தைகளை மீட்ட காவலர்!

நன்றி குங்குமம் தோழி

தில்லியில் சமாய்பூர் பத்லி காவல் நிலையத்தில் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் சீமா டாக்கா. இவருக்கு, தில்லியிலேயே முதல் முறையாக ‘Out-of-Turn’ பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை வரலாற்றில், இவ்வளவு விரைவில், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே பதவி உயர்வு கிடைக்கக் காரணம், இவர் கடந்த மூன்று மாதத்திற்குள் காணாமல் போன 76 குழந்தைகளைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்தியாவில் எட்டு நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு குழந்தை காணாமல் போவதாகத் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் தெரிவிக்கிறது. 2019 “Crime in India” என்ற அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மொத்தம் 73,138 குழந்தைகள் இந்தியாவில் காணாமல் போயுள்ளனர். இந்த எண்ணிக்கை,  2019ல் 8.9% சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.  காணாமல் போன குழந்தைகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக உள்ளது.

இப்படிக் கடத்தப்படும் குழந்தைகள், குழந்தை தொழிலாளியாகவும், பாலியல் தொழிலிலும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது இந்தியாவின் பிரச்சனை மட்டுமல்ல, உலகெங்கிலும் குழந்தைகள் காணாமல் போவது தீராத சவாலாக இருக்கிறது.

இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, தில்லி காவல்துறை ஆணையர் காணாமல் போகும் குழந்தைகளை மீட்கும் காவலர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். ஒரு வருடத்தில், 14 வயதுக்குட்பட்ட காணாமல் போன குழந்தைகளை மீட்கும் தில்லி கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வு வழங்கத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, சீமா டாக்கா மூன்று மாதத்திற்குள் 14 வயதுக்குட்பட்ட 56 குழந்தைகளையும், 14 முதல் 18 வயதிற்குட்பட்ட 20 குழந்தைகளையும் கண்டுபிடித்து ஒப்படைத்தார். அதில் பெரும்பாலான குழந்தைகள் கடந்த ஆண்டு காணாமல் போன குழந்தைகள். அவர்கள் தில்லி மட்டுமில்லாமல், பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனால் சீமாவிற்கு உடனடியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் காணாமல் போகும் குழந்தைகளை மீட்கும் முயற்சி வேகமடைந்துள்ளதாக கூறும் அதிகாரிகள், ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதன் மூலம், குழந்தை மீது நடத்தப்படும் வன்முறை மட்டுமல்லாமல் அவர்களை தவறான பாதையில் செலுத்துவதன் மூலம் வருங்காலத்தில் நிகழவிருக்கும் வன்முறைகளையும் தடுக்கமுடியும் எனக் கூறியுள்ளனர்.  

சீமா, இந்த குழந்தைகளை மீட்கப் பல தூரம் பயணம் செய்தும், பல ஆபத்துகளையும் சந்தித்துள்ளார். ஒரு வழக்கில், குழந்தை-தாய் இருவரும் காணாமல் போனதாகத் தந்தை அளித்த புகாரின் பேரில்  விசாரணை நடத்தப்பட்டது. அதில், தாய்-குழந்தை இருவரும் கடத்தப்பட்டு, பஞ்சாபில் ஹோஷியார்பூர் என்ற பகுதியில் இருப்பது தெரியவந்தது. கடத்தல்காரர்கள், தந்தையிடம் இருவரையும் விடுவிக்க ஒரு பெருந்தொகையைக் கேட்டு போன் செய்துள்ளனர். இதன் மூலம் சீமா பஞ்சாபிற்கு விரைந்து, அங்கே வாடிக்கையாளர் சேவையிலிருந்து அழைப்பது போலப் பேசி, கடத்தல்காரர்களிடம் ஆதார் அட்டை விவரங்களைக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அவர்கள் இதை நம்பி அளித்த விவரங்களை வைத்து கடத்தல்காரர்களைக் கண்டுபிடித்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றியுள்ளனர்.  

மேலும், மாயமான ஒரு குழந்தையை கண்டுபிடிக்க மேற்கு வங்கத்திற்குச் சென்று, பெரும் வெள்ளத்தில் இரண்டு நதிகளையும் கடந்து குழந்தையை மீட்டுள்ளார்.கடத்தல் வழக்குகள் தவிர, பெற்றோருடன் சண்டைபோட்டு வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், போதைக்கு அடிமையாகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவங்களும் அதிகம் நடப்பதாகக் கூறுகிறார்.   

இதே போல பல கடினமான வழக்குகளையும் தைரியமாக தன் திறமையைக் கொண்டு விரைவில் குழந்தைகளை மீட்டதற்காக பல அரசியல் தலைவர்களின் பாராட்டையும் பொது மக்களின் மனதையும் சீமா கவர்ந்துள்ளார். “ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாப்பாக மீட்டு அவர்கள் குடும்பத்திடம் ஒப்படைக்கும் போது, அவர்களின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே போதாது. இப்படிப் பெற்றோர்களின் நன்றியும் மகிழ்ச்சியும்தான், காணாமல் போன ஒவ்வொரு குழந்தையையும் மீட்கும் மன வலிமையைத் தந்தது. எனக்கும் ஒன்பது வயதில் ஒரு மகன் இருப்பதால், ஒரு தாயாகவும் குழந்தையை மீட்கக் கடின முயற்சியுடன் முழுவதுமாக பணியாற்றினேன்” எனக் கூறியுள்ளார்.

இருபது வயதில் காவல்துறையில் சேர்ந்த சீமா டாக்கா, 14 வருடங்களாகத் தில்லியில் பல இடங்களில் வேலை செய்துள்ளார். அப்போது அவரின் படைப்பிரிவிலிருந்த அனித் என்பவரைச் சந்தித்து இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். சீமா மாயமான குழந்தைகளை மீட்கச் செல்லும் போது, தன் காவல் நிலையத்தில் அதிகாரிகள் இல்லையெனில் தன் கணவரின் துணையுடன் சில இடங்களுக்குச் சென்றதாகவும் குறிப்பிடுகிறார்.

இப்போது தில்லி மக்களின் ஹீரோவாக மாறியிருக்கும் இவர், குழந்தை காணவில்லை என இரவில் கூட அழைப்புகள் பல வருவதாகக் கூறுகிறார். மக்களின் பாராட்டிற்கு நடுவே, தன் பொறுப்புகளும் அதிகரித்திருப்பதாக கூறும் சீமா,  எந்த நேரமாக இருந்தாலும் மக்களுக்கு உதவ எப்போதும் தயார் என்கிறார்.  அதே போலத் தில்லி காவல் துறை, சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்ட இரண்டே மாதத்தில், 1440 குழந்தைகளைக் கண்டுபிடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : children ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...