கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்கவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டி ஊராட்சி, பனத்தம்பேடு கண்டிகை, சர்ச் தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் கம்பிகள் துருபிடித்து கீழே விழும் நிலையில் உள்ளது. இவை அவ்வழியே செல்லும் மாதர்பாக்கம், பாதிரிவேடு, சாணாபுத்தூர், ஈகுவார்பாளையம், சத்தியவேடு, செதில்பாக்கம், பேந்தவாக்கம் ஆகிய பகுதியை சேர்ந்த வாகன ஒட்டிகள் மற்றும் வேலை செய்யும் தொழிலாளர்கள் மீது விழும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதன் மேல் பாகத்தில் எலக்ட்ரிக்கல் வயர் ஒன்றுசேர்ந்து சிமென்ட் உதிர்ந்து உள்ள மின் கம்பி மூலம் மின்சாரம் பாயும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: பழுதடைந்த மின் கம்பங்களையும், விளக்குகளையும் பழுது பார்க்க வேண்டும் என ஈகுவார்பாளையம் துணை மின்நிலையம் அலுவலகத்தில் பலமுறை புகாரளித்தோம். மின் வாரிய அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சிமென்ட் பெயர்ந்து மின் கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின் விளக்குகள் தொங்குவதாலும் தொழிலாளர், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இவ்வழியே சென்று வருகின்றனர். எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களையும், மின்விளக்குகளையும் உடனடியாக அகற்றி புதிதாக அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: