திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதியலாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

திருவள்ளூர்: மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுதா வௌியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை www.eshram.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இணையதளத்தில் கட்டுமான தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், ரிக்ஷா வண்டி இழுப்பவர்கள், தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், வீட்டுவேலை பணியாளர்கள், கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் நிரந்தர வருமானம் இல்லாத அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் இந்த தரவு தளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு செய்யும் பணி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் நடைபெற்று வருகிறது.

மாநில அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களின் கீழ் பதிவு செய்து உள்ள அனைத்து தொழிலாளர்களும் இந்த இணையதளத்தின் கீழ் பதிவு செய்யலாம். இந்த தரவு தளத்தில்  தொழிலாளர்களின் தங்களை பதிவு செய்து கொள்ள 16 வயது முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும், இபிஎப்ஓ மற்றும் இஎஸ்ஐசி உறுப்பினராக இருக்க கூடாது மற்றும் வருமான வரி செலுத்தும் நபராக இருக்க கூடாது. மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. முற்றிலும் இலவசம். பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை தேவை மற்றும் பிறந்த தேதி, பிறந்த ஊர் போன்ற இதர விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த தகவல்களை பதிவேற்றம் செய்த உடன் பயனாளிகளுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்ளுக்காகவோ புலம் பெயர நேர்ந்தாலும் அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளை பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இதன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: