30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது மாமல்லபுரத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட  நவீன பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். மாமல்லபுரத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை கண்டு ரசிக்க பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். மாமல்லபுரம், ஸ்ரீ தலசயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிமாக பஸ் நிலையம் செயல்படுகிறது. இங்கு, பஸ்களை நிறுத்த போதுமான வசதி இல்லை. மேலும், மாமல்லபுரத்திற்கு வருபவர்கள் நகரின் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதைக் கருத்தில், கொண்டு மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக்குழுமம் சார்பில் கடந்த 1992ம் ஆண்டு வெளிநாட்டில் உள்ளது போல், அதிநவீன பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்து, மாமல்லபுரத்தின் எல்லைப்பகுதியான ஸ்ரீ கருக்காத்தம்மன் கோயில் எதிரே 6.79 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக, அங்கு இருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருவாய்த்துறை மூலம் நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இன்னும் பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, ரூ.18 கோடி நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரன் பஸ் நிலையம் அமைய உள்ள இடம், பஸ் நிலையத்தின் வரைபடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறுகையில், கடந்த 2006-2011 வரை அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ஊருக்குள் இருந்த பஸ் நிலையத்தை வெளியே கொண்டு வர வேண்டுமென திட்டமிட்டு ரூ.18 கோடி நிதி ஒதுக்கி மத்திய பொதுப்பணித் துறை மூலம் பணிகள் மேற்கொள்ள அரசு அறிவித்தது. பின்னர், ஆட்சி மாற்றம் வந்தது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் எந்தவித பணியும் மேற்கொள்ளவில்லை. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மு.க. ஸ்டாலின் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் ஆகியோர் கோரிக்கையை ஏற்று, ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நவீன பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில், வணிக வளாகம், ஓட்டல், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளபட உள்ளது. இங்கு, தொல்லியல் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.

அந்த இடத்தில் 100 மீட்டருக்குள் எந்த கட்டடமும் கட்ட முடியாது. அந்த, இடங்களில் பார்க் ஏற்படுத்தப்படும். இன்னும், 3 மாதத்தில் பணிகள் தொடங்கி 15 மாதத்துக்குள் கட்டி முடித்து பொதுக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இதில், வீட்டு வசதி துறை அரசு முதன்மை செயலாளர் இத்தேஷ் குமார் மக்வானா, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, கலெக்டர் ராகுல் நாத், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் ரகு, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், திமுக மாவட்ட துணை செயலாளர் வெ.விஸ்வநாதன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன் குமார், லதா குப்புசாமி, வள்ளி ராமச்சந்திரன், கெஜலட்சுமி கண்ணதாசன், திமுக மாவட்ட பிரதிநிதி சண்முகாநந்தம், முருகன், விசிக மாநில தெரண்டரணி செயலாளர் சிறுத்தை வீ.கிட்டு, விசிக ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: