31 வது நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங். கட்சியினர் மலர் அஞ்சலி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்தில் அவரது 31வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீபெரும்புதூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இறந்த இடத்தில் ராஜீவ் அறக்கட்டளை சார்பில், நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது 31வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தபட்டது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி உயிர் நீத்த இடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் நினைவிடம் நுழைவாயிலில் அமைக்கபட்டிருந்த ராஜிவ்காந்தி வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் காட்சி பொது மக்கள் பார்வையிட்டனர். நினைவு தினத்தையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, மாநில எஸ்.சி., எஸ்.டி. துறை துணை தலைவர் அய்யப்பன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் நாகராஜ், ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் அருள்ராஜ், நகர பொருளாளர் வாசு, துணை தலைவர் செல்வம் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தினர். அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளரிடம் காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியதாவது; இன்றைக்கு எங்களுடைய கவலை, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, எங்களுடைய கண்ணீர் ஆறாய் ஓடியது. ஆனால்! அந்த கொலையாளிகளின் விடுதலையை திரு விழாவாக கொண்டாடும் பொழுது எங்கள் இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வடிகிறது .எங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். குற்றவாளி குற்றவாளிதான். குற்றவாளி கடவுளாக முடியாது. இவ்வாறு கூறினார்.

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் .கோ.சிவ ருத்ரய்யா தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .இரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .ப.கணேசன் தாசில்தார் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. முன்னாள் நகர தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான ஆர் .வி. குப்பன் தலைமை தாங்கி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நிர்வாகிகள் குமார், அவளுர் சீனிவாசன், ஆறுமுகம், லோகநாதன், தம்பிதுரை, சதீஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: