குரூப் 2 தேர்வு அறையில் செல்போனை மறைத்து வைத்திருந்தவர் சிக்கினார்: பரபரப்பை ஏற்படுத்திய ப்ளூடூத் சிக்னல்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளியில் நேற்று குரூப் 2 தேர்வு நடந்தது. 30 தேர்வு அறைகளில் 600 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்வில் பங்கேற்ற நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், செல்போனை மறைத்து வைத்திருந்தார். இதனை ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கண்டுபிடித்ததால் தேர்வு அறையில் இருந்து உடனடியாக போலீசாரால் வெளியேற்றப்பட்டார். ப்ளூடூத் சிக்னல் : ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கவுரவ உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வை 84 பேர் எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆய்வு செய்ய வந்தார். கலெக்டருடன் ஆய்வுக்கு வந்த ஒரு அதிகாரியின் செல்போனில் திடீரென ஒரு பெயருடன் ப்ளூடூத் சிக்னல் வந்துள்ளது. நீண்ட நேரம் அந்த சிக்னல் இருந்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் 5 அறைகளிலும் உள்ள தேர்வர்களிடம் சோதனை செய்தனர். 40 நிமிடம் நடந்த சோதனையில், யாரிடமும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பாளர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டு கலெக்டர் புறப்பட்டு சென்றார்.

Related Stories: