மடியில் கனம் இருப்பதால் எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக தவறிவிட்டது: டிடிவி தினகரன் பேட்டி

திருவண்ணாமலை: அதிமுக மடியில் கனம் இருப்பதால், எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று திருவண்ணாமலை வந்திருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: அதிமுக மடியில் கனம் இருக்கிறது. அதனால் அவர்களுக்கு பயமிருக்கிறது. எனவே, எதிர்க்கட்சியாக செயல்படாமல் அமைதியாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டனர். ஆட்சியில் இருந்தபோதே அவர்கள் வலிமையாக செயல்படவில்லை. பிரதான எதிர்க்கட்சி இடத்தை பிடிக்க பாஜ முயற்சிக்கிறது. ஒரு அரசியல் கட்சி அப்படித்தான் முயற்சி செய்யும். ஆனாலும், மக்கள் யாரை ஏற்பார்கள் என்பது தேர்தலின்போதுதான் தெரியும். அதிமுகவும், அமமுகவும் இணையுமா என்ற யூகத்துக்கு இப்போது பதில் சொல்ல இயலாது. நான் அரசியலில் ஞானியோ, ஜோதிடரோ இல்லை. அமமுகவை வெற்றி, தோல்வி எப்போதும் பாதிக்காது. தொடர்ந்து இயங்குவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: