மனைவி என்று நினைத்து வேறொரு பெண்ணை கொன்ற வியாபாரி: ஆம்பூரில் பயங்கரம்

ஆம்பூர்: ஆம்பூரில் மனைவி என நினைத்து நள்ளிரவு பிளாட்பாரத்தில் தூங்கிய இளம்பெண்ணை மாட்டு வியாபாரி கழுத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை இந்திரா நகரை சேர்ந்தவர் தேவேந்திரன்(49). மாடு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவியான ரேணுகாம்பாள் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், இவர் ஆம்பூருக்கு வியாபாரத்திற்கு வந்தபோது ஆம்பூரை சேர்ந்த தனலட்சுமி(35) என்பவரை சந்தித்துள்ளார். கணவர் இறந்துவிட்டதால், இரு குழந்தைகளை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் சேர்த்துவிட்டு தனியாக வசித்த இவரை தேவேந்திரன் சில மாதங்களுக்கு முன் மறுமணம் செய்துள்ளார். இருவரும் திருவண்ணாமலையில் வசித்தனர். இவர்களிடையே தகராறு ஏற்படவே தனலட்சுமி ஆம்பூருக்கு சென்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தேவேந்திரன் அவரை அழைத்து செல்ல ஆம்பூர் வந்தார். மாலை 3 மணியளவில் ஆம்பூர் நேதாஜி ரோட்டில் உள்ள ஷூ கடை அருகே சாலையோரத்தில் இருந்த தனலட்சுமியை அழைத்தபோது அவர் வர மறுத்துள்ளார். அதே சாலையோரம் ஆம்பூர்  கம்பிக்கொல்லை ஆசனாம்பட்டு ரோட்டை சேர்ந்த நவீத்(30) மனைவி கவுசரும் (27), திருட்டு வழக்கில் கணவர் கைதானதால் தங்கி இருந்தார். இரவில் இருவரும் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினர். ஆத்திரத்தில் இருந்த தேவேந்திரன் கத்தியுடன் நள்ளிரவு அங்கு வந்து, முகத்தை துணியால் மூடி தூங்கி கொண்டிருந்த கவுசரை தனது மனைவி என நினைத்து கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் பலியானார். சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட தனலட்சுமியையும் கத்தியால் குத்தி உள்ளார். இதில் அவர் காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் தேவேந்திரனை மடக்கி பிடித்தனர். தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். மனைவி என நினைத்து பிளாட்பாரத்தில் தூங்கிய பெண்ணை மாட்டு வியாபாரி குத்தி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: