பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் தலைமையில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பெரும்பாக்கத்தில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் உலகளாவிய வீட்டு வசதி தொழில்நுட்பமான முன் மாதிரி வடிவமைக்கப்பட்ட கட்டிட முறையில் அனைத்து வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அளித்த பேட்டி: அனைத்து வசதிகளுடன் கூடிய 1,152 குடியிருப்புகள்  ரூ.116.37 கோடி செலவில் தலா 96 குடியிருப்புகள் கொண்ட 12 கட்டிட தொகுப்புகளில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களாக கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு குடியிருப்பிற்கும் ஒன்றிய அரசின் மானியம் ரூ.5.50 லட்சம், மாநில அரசின் மானியம்  ரூ.3.50 லட்சம், பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.1.50 லட்சமும் ஆக மொத்தம் குடியிருப்பு ஒன்றிக்கு ரூ.10.50 லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் தலா 406 சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த திட்டப்பகுதியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வருகிற 26ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளை வழங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: